தமிழ்நாட்டின் நரம்பு மண்டலமாக விளங்கும் அரசுப் போக்குவரத்து கழகங்கள், தற்போது ஒரு மிகப்பெரிய நிதிச் சுனாமியில் சிக்கித் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. வெளியே இலவசத் திட்டங்களும், கவர்ச்சியான அறிவிப்புகளும் கொண்டாடப்பட்டாலும், உள்ளுக்குள் போக்குவரத்துத் துறை மெல்ல மெல்ல மரணப் படுக்கையை நோக்கித் தள்ளப்பட்டு வருவதாகத் தமிழ்நாடு போக்குவரத்து கழகப் பாதுகாப்புச் சங்கங்களின் கூட்டமைப்பு ஒரு பகீர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
கடந்த 2021-ஆம் ஆண்டு 38,500 கோடியாக இருந்த போக்குவரத்து கழகங்களின் மொத்தக் கடன், வெறும் ஐந்தே ஆண்டுகளில் 52,800 கோடியாக எகிறியுள்ளது. அதாவது, ஒரு மாதத்திற்கு 610 கோடி ரூபாய் வீதம், ஒரு நாளைக்குச் சுமார் 20 கோடி ரூபாய் நஷ்டத்தில் நமது அரசுப் பேருந்துகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்ற கசப்பான உண்மை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த நிதி நெருக்கடியை விடக் கொடுமையான விஷயம் என்னவென்றால், முறையான தகுதிச் சான்று எனப்படும் ‘எஃப்சி’ (Fitness Certificate) இல்லாத 5,480 பேருந்துகள் தினந்தோறும் லட்சக்கணக்கான பயணிகளைச் சுமந்து கொண்டு சாலையில் ஓடிக்கொண்டிருக்கின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 3,380 பேருந்துகள் கூடுதலாக இத்தகைய பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இது பயணிகளின் உயிருக்கு அரசு வைக்கும் உலை அல்லவா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்குப் பின்னால் இருக்கும் மிக முக்கியக் காரணம், ‘விடியல் பயணம்’ எனப்படும் பிங்க் பஸ் திட்டம். சமூக ரீதியாக இது ஒரு நல்ல திட்டமாகத் தெரிந்தாலும், இதனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏற்பட்ட நேரடி வருவாய் இழப்பு மட்டும் சுமார் 15,780 கோடி ரூபாய்.
இப்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், அனைத்துப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசம் என்ற “விஜய் வெற்றிப்பயணம்” திட்டம் வரப்போவதாகத் தகவல்கள் வருகின்றன. இது மட்டும் நடந்தால், அடுத்த மூன்று ஆண்டுகளில் போக்குவரத்து கழகங்களின் கடன் ஒரு லட்சம் கோடியைத் தாண்டி, ஒட்டுமொத்தத் துறையும் திவாலாகும் நிலைக்குச் செல்லும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
இதன் மிக மோசமான விளைவாக, நஷ்டத்தைத் தாங்க முடியாமல், லாபமில்லாத சுமார் 3,000 கிராமப்புற வழித்தடங்கள் நிரந்தரமாக நிறுத்தப்படும் அபாயம் உள்ளது. இது கிராமப்புற மாணவர்களின் கல்வியையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் மிகக் கடுமையாகப் பாதிக்கும் என்பதுதான் நிதர்சனம்.
எனவே, போக்குவரத்து கழகங்களை இந்த மரணப் படுக்கையில் இருந்து மீட்க அரசு உடனடியாக ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. இலவசத் திட்டங்களைச் சொகுசுப் பேருந்துகளுக்கு விரிவுபடுத்தாமல், வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே சலுகைகளை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.
அரசு ஊழியர்களுக்கான 9,800 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கி, பழைய பேருந்துகளை அப்புறப்படுத்திப் புதிய பேருந்துகளை வாங்கினால் மட்டுமே, வருங்காலத் தலைமுறையினர் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்ய முடியும். கவர்ச்சி அரசியலுக்காக ஒரு மாபெரும் பொதுக் கட்டமைப்பைச் சாகடிப்பது நியாயமா? என்னும் கருத்தை இப்போது ஆர்வலர்கள் முன்வைத்து வருகின்றனர்.
