மே 10ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், முதலமைச்சர் விஜய், ” எப்படித் தொடங்குவது எனத் தெரியவில்லை. சினிமாவில் எப்படியாவது கஷ்டப்பட்டு வெற்றி அடைய வேண்டும் என இருந்த சாதாரண உதவி இயக்குநரின் மகன் நான். வறுமை என்றால் என்ன என்பது குறித்து எனக்கும் தெரியும். மன்னர் பரம்பரையில் இருந்து வந்துவிடவில்லை.
உங்கள் அண்ணன், உங்கள் தம்பி, உங்கள் மகன் மாதிரிதான் நானும். அப்படித்தான் நானும் உணர்கிறேன். நீங்களும் என்னை அப்படி நினைத்ததால்தான் எனக்கு சினிமாவில் மிகப்பெரிய இடம் கொடுத்தீர்கள்,” என்றார். அவரின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியது. இந்தநிலையில் விஜய்யின் பள்ளி நண்பர் ஒருவர் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
அதில், ” விஜய் தமிழக முதல்வராகப் பதவியேற்ற பிறகு ஆற்றிய தனது முதல் உரையில், தான் வறுமையில் வளர்ந்ததாகவும், பசி என்றால் என்னவென்று கூட தனக்குத் தெரியும் என்றும் கூறினார். இது பொய். ஏனென்றால் நான் அவருடன் லயோலா பள்ளியில் 3ம் வகுப்பில் ஒன்றாகப் படித்தேன். வகுப்புத் தோழனாக இருந்தேன். விஜயின் தந்தை திரைப்பட இயக்குநர். அவர் தன் மகனுக்குத் திரைப்படத் துறையில் ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொடுத்தார்.
பெரும்பாலான திரைப்பட இயக்குநர்களைப் போலவே அவரது தந்தையும் பொருளாதார நெருக்கடிக் காலங்களைச் சந்தித்திருக்கலாம். ஆனால் அது வறுமைக்குச் சமமானதல்ல. வசதியான குடும்பத்தைச் சேர்ந்த பல இளைஞர்கள், பணமில்லாமல் இருப்பதையும் வறுமையையும் குழப்பிக் கொள்கிறார்கள். இரண்டும் முற்றிலும் வெவ்வேறானவை,” எனப் பதிவிட்டுள்ளார். அவரின் இந்த ட்வீட் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
