தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள தவெக தலைவர் விஜய் பனையூரில் இருந்து தலைமைச் செயலகம் செல்வதற்கு, ஹெலிகாப்டரை பயன்படுத்த திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சாலைப் பயணங்களில் போக்குவரத்து நெரிசல் மற்றும் கூட்ட நெரிசலைத் தவிர்க்க, சென்னை பனையூர் வீட்டில் இருந்து செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு ஹெலிகாப்டர் மூலம் செல்ல, ஹெலிபேட் (Helipad) வசதிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறதாம்.
இதற்காக, தலைமை செயலகத்திற்கு வெளியே உள்ள வாகன நிறுத்தம் அருகே ஹெலிபேட் அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளதாம். செயிண்ட் ஜார்ஜ் கோட்டையையும் – மெரினா கடற்கரையையும் இணைக்கும் நேப்பியர் பாலம் அருகே, கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹெலிபேட் உள்ளது. இதை குடியரசு தலைவர், பிரதமர் ஆகியோர் தங்களின் தமிழக வருகையின் (Visit) போது பயன்படுத்தி வருகின்றனர். என்றாலும் கடலோர காவல்படை பயன்பாட்டில் உள்ளதால், இதை தொடர்ந்து பயன்படுத்த அனுமதி கிடைக்காது என கூறப்படுகிறது.
தலைமை செயலக வளாகத்தில் உள்ள ராணுவ மைதானத்தில், தற்காலிக ஹெலிபேட் வசதி உள்ளது. இங்கு, விஜய் வந்து செல்லும் ஹெலிகாப்டரை இறக்குவது குறித்து, ராணுவ அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்கப்பட்டு உள்ளதாம். இதேபோல, பனையூரில் உள்ள விஜய் வீட்டிற்கு அருகே கடற்கரை ஒட்டிய இடத்தில், இரண்டு இடங்களில் ஹெலிபேட் அமைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்கள் பிரச்சாரங்களுக்கு மட்டுமே ஹெலிகாப்டரை பயன்படுத்தினர். தற்போது விஜய் தலைமை செயலகத்துக்கு தினசரி வந்து செல்வதற்கே, ஹெலிகாப்டரை பயன்படுத்த திட்டமிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
