சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட பிரேமலதா விஜயகாந்த், விருத்தாசலம் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், அவர் இன்று தமிழக சட்டசபைக்கு வருகை தந்து எம்.எல்.ஏ.வாக பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்பு நிகழ்ச்சியின் போது முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு வணக்கம் தெரிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் பல முக்கிய கருத்துகளை பகிர்ந்துகொண்டார். “இன்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ளேன். என்னை வெற்றி பெறச் செய்த விருத்தாசலம் தொகுதி மக்களுக்கும், கூட்டணி கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கும் மற்றும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வெற்றியை கேப்டன் விஜயகாந்துக்கு சமர்ப்பிக்கிறேன்,” என்று கூறினார்.
மேலும், விருத்தாசலம் மக்களிடம் தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றப் பாடுபடுவேன் என்றும் அவர் உறுதியளித்தார். தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள விஜய்க்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார். “முதலமைச்சர் விஜய்க்கு கட்டாயம் நேரம் கொடுக்க வேண்டும். அவருக்கு உரிய அவகாசத்தை வழங்குவோம். அதன் பின்னர் மக்கள் பிரச்சனைகள், தமிழகத்தின் உரிமைகள் மற்றும் பொதுமக்களின் தேவைகள் குறித்து சட்டசபையில் வலியுறுத்திப் பேசுவோம்,” என்று தெரிவித்தார்.
பிரேமலதாவின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது.
