ஸ்டாலின், வைகோவை சந்திக்கும் முதல்வர் விஜய்… என்ன காரணம்?

தமிழகத்தின் 17-வது சட்டசபையின் முதல் கூட்டம் இன்று சிறப்பாக நடைபெற்று வருகிறது. தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தொடரில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்றார். சட்டசபை கூடியதும் முதலமைச்சர் விஜய்க்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா வாழ்த்து தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதலில் பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற முதலமைச்சர் ஜோசப் விஜய், எம்.எல்.ஏ.வாக பதவியேற்றார். பின்னர் பதவியேற்றதற்கான அதிகாரப்பூர்வ பதிவேட்டிலும் அவர் கையெழுத்திட்டார். தொடர்ந்து பல்வேறு தொகுதிகளில் வெற்றி பெற்ற உறுப்பினர்களும் எம்.எல்.ஏ.க்களாக பதவியேற்றனர்.

இந்நிலையில், அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் பதவியேற்க வந்தபோது தவறுதலாக வேறு சான்றிதழை எடுத்துவந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் இன்று எம்.எல்.ஏ.வாக பதவியேற்க முடியவில்லை. மேலும், அமைச்சர் கீர்த்தனா சான்றிதழை தன்னுடன் எடுத்து வராததால் பதவி ஏற்கவில்லை.தேவையான ஆவணங்களுடன் பின்னர் பதவியேற்பு நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், தமிழக முதல்வர் விஜய் இன்று மே 11ந்- தேதி முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற செல்கிறார். மேலும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை இன்று பிற்பகல் 3.30 மணிக்கு சந்திக்க உள்ளார். திமுக கூட்டணியில் உள்ள வைகோவை மரியாதை நிமித்தமாக அண்ணாநகர் இல்லத்திற்கு நேரில் சென்று முதலமைச்சர் சந்திக்க உள்ளார்.

இந்த சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது.

Related News

Latest News