தமிழகத்தின் 17-வது சட்டசபை கூடியது…. முதல் முறையாக சட்டசபையில் முதல்வர் விஜய்…. என்ன நடக்கிறது?

முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழகத்தின் 17-வது சட்டசபை இன்று காலை சென்னையில் கூடியது. நீலாங்கரை இல்லத்தில் இருந்து சட்டப்பேரவைக்கு முதலமைச்சர் விஜய் புறப்பட்டு வந்தார். முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக அவர் சட்டப்பேரவைக்குள் வருகை தந்தது அரசியல் வட்டாரங்களில் முக்கியத்துவம் பெற்றதாக பார்க்கப்பட்டது.

அதேபோல், சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற புதிய எம்எல்ஏக்களும் சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர். தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தொடரில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. சட்டசபை கூடியதும் முதலமைச்சர் விஜயை தற்காலிக சபாநாயகர் கருப்பையா வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.

தமிழக மக்களுக்காக உழைக்க தன்னை இயந்திரமாய் மாற்றிக்கொண்ட முதல்வரை வணங்குகிறேன் என தற்காலிக சபாநாயகர் புகழாரம் சூட்டினார். பின்னர், உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி தொடங்கியது. முதலில் பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற முதலமைச்சர் ஜோசப் விஜய் எம்எல்ஏவாக பதவியேற்றார்.

அவரைத் தொடர்ந்து பல்வேறு தொகுதிகளில் வெற்றி பெற்ற உறுப்பினர்களும் பதவியேற்று சட்டப்பேரவை பணிகளை அதிகாரப்பூர்வமாக தொடங்கினர். புதிய அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டமாக அமைந்த இந்த நிகழ்வு அரசியல் ரீதியாக பெரும் கவனத்தை ஈர்த்தது. புதிய உறுப்பினர்கள் அனைவரும் மக்கள் நலனை முன்னிறுத்தி செயல்படுவோம் என்ற உறுதியுடன் பதவியேற்றனர்.

Related News

Latest News