தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இன்று பதவியேற்றுக்கொண்டார். சென்னை நகரில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கம் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழா உற்சாகமான சூழலில் அமைந்தது. பதவியேற்ற உடனேயே முதலமைச்சர் விஜய் மக்கள் நலன் சார்ந்த மூன்று முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.
அதில் இலவச மின்சார திட்டம், பெண்கள் பாதுகாப்புக்கான “சிங்கப்பெண்” சிறப்பு அதிரடிப்படை அமைத்தல் மற்றும் போதைப்பொருள் தடுப்பு படை உருவாக்கம் ஆகிய திட்டங்கள் இடம்பெற்றிருந்தன. மேடையிலேயே இந்த கோப்புகளில் கையெழுத்திட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்தது.
இதனைத் தொடர்ந்து விழாவை முடித்துக்கொண்டு முதலமைச்சர் விஜய் தலைமைச் செயலகத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அவர் தலைமைச் செயலகத்தை அடைந்ததும் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் அமைச்சர்கள், மூத்த அரசு அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறை செயலாளர்கள் அவரை மலர்கொத்து வழங்கி வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் அறைக்குச் சென்ற விஜய், முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து தனது முதல் அலுவல் பணிகளை தொடங்கினார். எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு தொடர்பான முக்கிய கோப்புகளில் அவர் கையெழுத்திட்டார். பதவியேற்ற முதல் நாளிலேயே நிர்வாக நடவடிக்கைகளை தீவிரமாக தொடங்கிய விஜயின் செயல்பாடு அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
