‘ஒரே பவர் சென்டர்தான்… ஆட்டம் ஆடலாம் என நினைத்தால்’… அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் எச்சரிக்கை

தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் தமிழ்நாட்டின் 14வது முதலமைச்சராக இன்று பதவியேற்றுக் கொண்டார். சென்னை நகரில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட விழாவில், செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். விழாவில் ராகுல் காந்தி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். மேலும் விஜய்யின் தாய், தந்தை, குடும்பத்தினர் மற்றும் த்ரிஷா உள்ளிட்ட பிரபலங்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

முதலமைச்சராக பதவியேற்ற பிறகு உரையாற்றிய விஜய், மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுவதே தனது முக்கிய கடமை என்று தெரிவித்தார். “அரசுத் திட்டங்களை முழுமையாக நிறைவேற்ற எனக்கு கொஞ்சம் அவகாசம் வேண்டும். பெண்கள் பாதுகாப்பில் மிகவும் கவனமாக இருப்பேன். போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் இன்றுமுதல் தீவிரமாக தொடங்கும்” என்று கூறினார். மேலும், “சட்டம் மற்றும் ஒழுங்கை அனைவருக்கும் சமமாக உறுதிப்படுத்துவேன். மக்களின் அடிப்படை தேவைகள் மீது முழு கவனம் செலுத்தப்படும்” என்றும் தெரிவித்தார்.

அதேபோல், ஊழலுக்கு தனது ஆட்சியில் எந்த இடமும் இருக்காது என உறுதியாக கூறிய விஜய், “மக்கள் பணத்தில் இருந்து ஒரு ரூபாய்கூட எடுக்க மாட்டேன். இந்த விஜய் தப்பு பண்ண மாட்டான்; தப்பு பண்ணவும் விடமாட்டான். அது யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்தார்.

மேலும், “நாம் ஆட்சிக்கு வந்துவிட்டோம் என்பதால் அதிகார ஆட்டம் நடத்தலாம் என்ற எண்ணம் யாருக்கும் இருக்கக் கூடாது. என் தலைமையிலான ஒரே நிர்வாக மையம்தான் இங்கு இருக்கும்” என்று அவர் தெரிவித்தார். விஜயின் இந்த உரை தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

Related News

Latest News