ரேஷன் விநியோகத்தில் அதிரடி மாற்றம்: மத்திய அரசின் புதிய திட்டம்…

இந்தியாவில் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் அரிசி, கோதுமை மற்றும் பிற தானியங்களை நம்பி வாழும் கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு முக்கியமான மாற்றம் ஒன்று வரவிருக்கிறது. மத்திய அரசு, ‘தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013’ (NFSA) சட்டத்தில் திருத்தம் செய்யும் நோக்கில் புதிய வரைவு மசோதாவை வெளியிட்டுள்ளது. இதில் ‘அந்தியோதயா அன்ன யோஜனா’ (AAY) திட்டத்தின் கீழ் தானியங்கள் வழங்கப்படும் முறையில் மாற்றம் கொண்டு வர முன்மொழியப்பட்டுள்ளது.

தற்போது, AAY ரேஷன் அட்டை வைத்துள்ள குடும்பங்களுக்கு, குடும்பத்தில் எத்தனை பேர் இருந்தாலும் மாதத்திற்கு 35 கிலோ தானியம் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இந்தத் திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான குடும்பங்கள் இலவச அரிசி பெற்று வருகின்றன. இதேபோல், பிற மாநிலங்களிலும் அரிசி மற்றும் தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஆனால், தற்போதைய முறையில் சிறிய குடும்பங்களுக்கும் பெரிய குடும்பங்களுக்கும் ஒரே அளவு தானியம் வழங்கப்படுவதால், தனிநபர் அடிப்படையில் சமநிலை இல்லை என்று அரசு கூறுகிறது. இரண்டு பேர் கொண்ட குடும்பத்திற்கும், ஆறு பேர் கொண்ட குடும்பத்திற்கும் 35 கிலோ தானியம் வழங்கப்படுவதால், சிறிய குடும்பங்கள் அதிக பயன் பெறுகின்றன என்பது அரசின் கருத்தாகும்.

இதனை சரிசெய்யும் வகையில், குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் மாதந்தோறும் 7 கிலோ தானியம் வழங்கும் புதிய முறை முன்மொழியப்பட்டுள்ளது. எனினும், ஒரு குடும்பத்திற்கு வழங்கப்படும் அதிகபட்ச அளவு 35 கிலோ என்ற வரம்பு தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. தற்போது இது வரைவு மசோதாவாக மட்டுமே உள்ளது. பொதுமக்கள் தங்களது கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை 2026 ஜூலை 13-ஆம் தேதி வரை சமர்ப்பிக்கலாம் என உணவு மற்றும் பொது விநியோகத் துறை அறிவித்துள்ளது.

Related News

Latest News