விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற உடனேயே மக்கள் நலன் சார்ந்த மூன்று முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டு தனது ஆட்சிப் பணிகளை தொடங்கினார். இலவச மின்சார திட்டம், பெண்கள் பாதுகாப்புக்கான “சிங்கப்பெண்” சிறப்பு அதிரடிப்படை அமைத்தல் மற்றும் போதைப்பொருள் தடுப்பு படை உருவாக்கம் ஆகிய திட்டங்களுக்கு அவர் ஒப்புதல் அளித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்தது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற உரையில், முதலமைச்சர் விஜய் உணர்ச்சிபூர்வமாக பல கருத்துகளை பகிர்ந்துகொண்டார். “எனக்கு வறுமை, பசி என்றால் என்னவென்று தெரியும். நான் மன்னர் பரம்பரையில் இருந்து வந்தவன் அல்ல. சாதாரண மனிதராக மக்களின் வாழ்க்கையை நெருக்கமாக பார்த்தவன்” என்று அவர் கூறினார். மேலும், “நான் தேவதூதன் அல்ல; ஒரு சாதாரண மனிதன். மக்களை ஏமாற்றும் வகையில் பொய்யான வாக்குறுதிகளை நான் அளிக்க மாட்டேன்” என்றும் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசின் தற்போதைய நிதிநிலை குறித்து விரைவில் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்றும் அவர் அறிவித்தார். “தமிழ்நாட்டின் கஜானா காலியாக உள்ளது. முந்தைய ஆட்சியாளர்கள் அனைத்தையும் வழித்து தொடைத்து வைத்திருக்கிறார்கள்” என்று அவர் குற்றம்சாட்டினார். இந்த கருத்து அரசியல் அரங்கில் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், “எனக்கு அவமானம் கொடுத்தவர்களாக இருந்தாலும் அவர்கள் என் நண்பர்கள் தான். எதிரி என யாராக இருந்தாலும், இந்த மாநிலத்தின் 8 கோடி மக்களும் என் மக்கள்” என்று விஜய் உருக்கமாக பேசினார். அவரது இந்த பேச்சு தொண்டர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், பொதுமக்களிடமும் நம்பிக்கையை ஏற்படுத்தியதாக பார்க்கப்படுகிறது.
