அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ. காமராஜ் பெயரில் ஆளுநரிடம் போலி ஆதரவு கடிதம் வழங்கப்பட்டிருக்கலாம் என கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும், காமராஜை அழுத்தம் கொடுத்து தமிழக வெற்றி கழகம் ஆதரவாக கடிதம் பெற முயற்சி செய்யப்பட்டிருக்கலாம் என்றும் அவர் சந்தேகம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என ஆளுநரிடம் புகார் மனுவும் அளித்துள்ளார்.
சென்னை அடையாறில் செய்தியாளர்களை சந்தித்த தினகரன், “அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக கூறப்படும் வீடியோவை எடுத்தது யார்? அது எங்கு எடுக்கப்பட்டது? அந்த வீடியோவை விஜய் எடுத்தாரா, செங்கோட்டையனா அல்லது ஆதவ் அர்ஜுனாவா?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், அந்த வீடியோ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர் சந்தேகம் தெரிவித்தார்.
“காமராஜ் கையெழுத்திட்டதாக கூறப்படும் அசல் ஆதரவு கடிதம் எங்கே? அதை பொதுமக்களுக்கு காட்ட முடியுமா?” எனவும் தினகரன் கேள்வி எழுப்பினார். விஜய் தலைமையிலான தவெக தரப்பில் காமராஜிடம் நேரடியாக எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்றும், குதிரைப்பேரம் நடத்தும் நோக்கில் போலி கடிதம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் குற்றம்சாட்டினார்.
மேலும், “முதலமைச்சர் ஆகவே போலி ஆவணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த விவகாரத்தை நான் சும்மா விடமாட்டேன்” என எச்சரித்த தினகரன், “விஜய் ஆட்சி அமைத்தால் தமிழகத்தில் பேரழிவு ஏற்படும்” என்றும் கடுமையாக விமர்சித்தார்.
