மெட்ரோ புதிய திட்டம்.. மே மாதம் அமல்… நோட் பண்ணிக்கோங்க..

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தனது பயண அட்டை முறையில் முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது. இதுவரை பயன்படுத்தப்பட்டு வந்த மெட்ரோ பயண அட்டைக்கு பதிலாக, “சிங்கார சென்னை அட்டை” எனப்படும் தேசிய பொது போக்குவரத்து அட்டைக்கு முழுமையாக மாற திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அட்டை முதன்முதலில் 14.04.2023 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய அரசின் வழிகாட்டுதலின்படி, நாடு முழுவதும் உள்ள அனைத்து பொதுப் போக்குவரத்துகளிலும் ஒரே அட்டையை பயன்படுத்தி தடையற்ற பயணம் மேற்கொள்ளும் வசதியை உருவாக்கும் நோக்கில் இந்த மாற்றம் செய்யப்படுகிறது.

இந்த திட்டத்தின் அடிப்படையில், 01.05.2026 முதல் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் “சிங்கார சென்னை அட்டை” மட்டுமே பயன்படுத்தப்படும். இதனால் பழைய மெட்ரோ பயண அட்டைகள் முற்றிலும் நீக்கப்படுகின்றன. பயணிகள் தங்களிடம் உள்ள பழைய அட்டைகளில் இருக்கும் பணத்தை வீணாக்காமல், அதை புதிய முறைக்கு மாற்றிக் கொள்ளுமாறு மெட்ரோ நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அதற்காக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மொபைல் செயலி மூலம் QR Stored Value Pass ஆக மாற்றிக்கொள்ளலாம் அல்லது நேரடியாக தேசிய பொது போக்குவரத்து அட்டைக்கு பணத்தை மாற்றிக்கொள்ளலாம்.

மேலும், இந்த மாற்றம் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்வதற்கும், மெட்ரோ வாகன நிறுத்த வசதிகளை பயன்படுத்துவதற்கும் கட்டாயமாகும். பயணிகளுக்கு பாதுகாப்பான, எளிதான மற்றும் நம்பகமான பயண அனுபவத்தை வழங்கும் நோக்கில் இந்த புதிய அமைப்பு கொண்டு வரப்படுகிறது. இதனால் பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு மெட்ரோ நிர்வாகம் வருத்தம் தெரிவித்ததுடன், பொதுமக்களின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறது.

Related News

Latest News