தமிழகம் முழுவதும் கோடை காலம் தொடங்கும் முன்பே வெயில் கடுமையாக அதிகரித்து மக்களை வாட்டி வதைக்கிறது. அக்னி நட்சத்திரம் (கத்திரி வெயில்) தொடங்குவதற்கு முன்பே பல நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரியை தாண்டியுள்ளது. கரூர் பரமத்தியில் அதிகபட்சமாக 106.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து ஈரோடு 104.3 டிகிரி, மதுரை விமான நிலையம் 104 டிகிரி, மதுரை நகரம் 103.2 டிகிரி, திருச்சி 103.1 டிகிரி, வேலூர் 102.7 டிகிரி, கோவை 101.6 டிகிரி ஆகிய இடங்களிலும் வெப்பம் அதிகமாக பதிவாகியுள்ளது. தர்மபுரி, நாமக்கல், பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் 101.3 டிகிரி மற்றும் சேலத்தில் 100.7 டிகிரி வெயில் பதிவானது.
சென்னையில் 100 டிகிரிக்கு குறைவாக இருந்தாலும் வெப்பம் அதிகமாகவே உணரப்படுகிறது. மீனம்பாக்கத்தில் 97.8 டிகிரி மற்றும் நுங்கம்பாக்கத்தில் 93.5 டிகிரி பதிவாகியுள்ளது. பகல் நேரங்களில் வெயில் சுட்டெரிக்க, மக்கள் வெளியே செல்ல கடுமையாக அவதிப்படுகின்றனர். வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் வெளிப்புற வேலை செய்பவர்கள் அதிக சிரமத்திற்கு உள்ளாகின்றனர். வீடுகளுக்குள்ளும் வெப்பம் குறையாமல், மின்விசிறிகள் கூட சூடான காற்றையே வீசுகின்றன.
வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க மக்கள் குடை, துணி போன்றவற்றை பயன்படுத்தி வருகின்றனர். சாலைகளில் பகல் நேரங்களில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. இதே நேரத்தில் இளநீர், நுங்கு, தர்பூசணி போன்ற குளிர்பானங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இரவு நேரங்களிலும் வெப்பம் குறையாமல் இருப்பதால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் தூங்க முடியாமல் தவிக்கின்றனர்.
இன்னும் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால், பகல் 11 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்லாமல் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
