நடிகரும் த.வெ.க தலைவருமான விஜய் நடித்துள்ள கடைசி திரைப்படம் ‘ஜனநாயகன்’. இந்த படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். பொங்கல் பண்டிகைக்கு முன்பாக படத்தை ரிலீஸ் செய்ய பட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்ட நிலையில் சென்சார் சான்றிதழில் ஏற்பட்ட சிக்கலால் ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாகவில்லை.
நேற்று மாலை ஜன நாயகன் திரைப்படத்தின் சில காட்சிகள் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியிடப்பட்டது. இதையடுத்து, இன்று அதிகாலை 3 மணிநேரம் கொண்ட முழு படமும் இணையத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், ஜனநாயகன் பட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:- செல்போனில் ஜனநாயகன் படம் வந்தால் டெலிட் செய்யுங்கள் விஜய்யின் ஜனநாயகன் படம் சட்டவிரோதமாக இணையதளங்களில் முழுமையாக வெளியாகியுள்ளது.
ஜனநாயகன் படத்தை பதிவிறக்கம் செய்பவர்கள் மற்றும் பகிர்வோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். ஜனநாயகன் படத்தை செல்போனில் வைத்திருப்பவர்கள், பார்ப்பவர்கள் மீதும் கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஜனநாயகன் படத்தை பகிரவோ, செல்போனில் சேமித்தோ வைக்க வேண்டாம். இந்த குற்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சிவில் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
