நடிகர் சல்மான் கானுக்கு எதிரான வழக்கு : நீதிமன்றத்தின் தீர்ப்பால் நிம்மதி

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூரைச் சேர்ந்த யோகேந்திர சிங் படியால், பாலிவுட் நடிகர் சல்மான் கான் மற்றும் ராஜு பான் மசாலா நிறுவனத்திற்கு எதிராக அங்குள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் அளித்தார். தனது மனுவில், ‘குங்குமப்பூ கலந்த ஏலக்காய்’ என்ற பெயரில், புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய அபாயகரமான போதைப்பொருட்களை விளம்பரம் செய்து மக்களை தவறாக வழிநடத்துகின்றனர் என்று குற்றம் சாட்டினார்.

இந்த புகாரை தொடர்ந்து, கடந்த ஜனவரி 6ஆம் தேதி அந்த விளம்பரங்களை ஒளிபரப்ப நுகர்வோர் நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால், விளம்பர பலகைகள் அகற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த வழக்கில் நடிகர் சல்மான் கான் ஆஜராகாததால், அவருக்கு எதிராக மாவட்ட நுகர்வோர் ஆணையம் நான்கு முறை பிடிவாரண்ட் பிறப்பித்தது.இந்த உத்தரவுகளை எதிர்த்து சல்மான் கான் தரப்பு ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனூப் சிங் அமர்வு, சல்மான் கானுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டுக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும், விளம்பரங்களுக்கு விதிக்கப்பட்ட தடை மற்றும் முன்பு வழங்கப்பட்ட வாரன்ட் உத்தரவுகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

Related News

Latest News