மாதவரம் பால் பண்ணையில் ஏற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்சினை காரணமாக, வடசென்னையில் ஆவின் பால் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் மாநில தலைவர் சு.ஆ. பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
மாதவரம் பால் பண்ணையில் தொழிலாளர்களுக்கான ஒப்பந்தம் கடந்த மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அதன் பின்னர், சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் ஒப்பந்தம் பெற்றிருந்த ஒப்பந்ததாரருக்கே மாதவரம் பண்ணையின் ஒப்பந்தமும் வழங்கப்பட்டது. ஆனால், அந்த ஒப்பந்ததாரர் தேவையான 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை அனுப்ப முடியாமல், வெறும் 8 பேரை மட்டுமே பணிக்கு அனுப்பியுள்ளார்.
இதனால், கடந்த ஒரு வாரமாக மிகக் குறைந்த தொழிலாளர்களுடன் மாதவரம் பால் பண்ணை இயங்கி வந்தது. பால் விநியோகம் பாதிக்கப்படாமல் இருக்க, மொத்த விநியோகஸ்தர்களின் வாகன ஓட்டுநர்களும் உதவியாளர்களும் கூடுதல் பொறுப்பாக பால் பாக்கெட்டுகளை டப்பாக்களில் அடுக்கி வாகனங்களில் ஏற்றும் பணிகளை செய்து வந்தனர்.
ஆனால், தொழிலாளர்கள் பற்றாக்குறையை சரிசெய்ய ஆவின் நிர்வாகமும், ஒப்பந்ததாரரும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், இந்த கூடுதல் பணியை தங்களால் தொடர்ந்து செய்ய முடியாது என்று வாகன ஓட்டுநர்கள் தெரிவித்தனர். இதனால், அம்பத்தூர் மற்றும் சோழிங்கநல்லூர் பால் பண்ணைகளிலிருந்து பால் ஏற்றிச் செல்ல வேண்டிய வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.
இதன் விளைவாக, மாதவரம் பால் பண்ணையிலிருந்து வழங்கப்பட வேண்டிய ஆவின் பால் விநியோகம் இன்று 60 சதவீதத்திற்கும் மேல் பாதிக்கப்பட்டது. பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க. நகர், வியாசர்பாடி, கொடுங்கையூர், கொருக்குப்பேட்டை உள்ளிட்ட வடசென்னையின் பல பகுதிகளில் பால் விநியோகம் முற்றிலும் தடைபட்டது.
இதனால், பால் முகவர்களும் பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணப்படவில்லை என்றால், வடசென்னை முழுவதும் ஆவின் பால் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த விவகாரத்தில் பால்வளத்துறை அமைச்சர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு, பால் விநியோகத்தை சீர்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
