ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் ராஜினாமா

ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான கேம்ப்பெல் வில்சன் தனது பதவியிலிருந்து ராஜிநாமா செய்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. ஆனால், இதுகுறித்து ஏர் இந்தியா நிறுவனம் இதுவரை அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

டாடா குழுமம் தனது விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியாவின் தலைமைப் பதவிக்கு 2022 மார்ச் மாதத்தில் இல்கர் அய்சி என்பவரை நியமிக்க முயன்றது. ஆனால், அவர் அந்தப் பொறுப்பை ஏற்க மறுத்ததால், அதனைத் தொடர்ந்து கேம்ப்பெல் வில்சன் தலைமைச் செயல் அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான பதவிகளில் நியமிக்கப்பட்டார்.

நியூசிலாந்தைச் சேர்ந்த கேம்ப்பெல் வில்சன் (55), விமானப் போக்குவரத்து துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். இவர் முன்னதாக சிங்கப்பூரை மையமாகக் கொண்ட ஸ்கூட் விமான சேவை நிறுவனத்தில் தலைமை அதிகாரியாக பணியாற்றியவர்.

அவரின் பதவிக்காலம் 2027 ஆம் ஆண்டு வரை நீடிக்க இருந்த நிலையில், தற்போது அவர் ராஜிநாமா செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, புதிய தலைமை நிர்வாக அதிகாரியைத் தேர்வு செய்யும் பணியில் ஏர் இந்தியா தீவிரமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், கடந்த ஆண்டு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் அருகிலிருந்த மருத்துவக் கல்லூரி விடுதியில் விழுந்து நொறுங்கிய விபத்தில் 241 பேர் உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவத்திற்குப் பிறகு, கேம்ப்பெல் வில்சன் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News