பிரபல சின்னத்திரை தொடரில் நடித்துவரும் சுபாஷிணி (36), இலங்கையைச் சேர்ந்தவர். இவர் 2024ஆம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த பிப்பின் சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். படப்பிடிப்பில் கலந்து கொள்ள வசதியாக, சென்னை போரூர் அருகிலுள்ள அய்யப்பன்தாங்கல் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகை வீட்டில் தங்கி வந்தார்.
இந்த நிலையில், கடந்த 3ஆம் தேதி சென்னை வந்த அவர், தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பில் தொடர்ந்து பங்கேற்று வந்தார். நேற்று இரவு வழக்கம்போல், தனது கணவர் பிப்பின் சந்திரனுடன் வீடியோ அழைப்பில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மனவேதனை அடைந்த சுபாஷிணி, தனது படுக்கையறையில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதை வீடியோ அழைப்பில் பார்த்த பிப்பின் சந்திரன் அதிர்ச்சி அடைந்து உடனடியாக போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, சுபாஷிணி தூக்கில் உயிரிழந்த நிலையில் இருந்தார். பின்னர் அவரது உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குடும்ப தகராறின் காரணமாக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பதை போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்காக சுபாஷிணியின் செல்போனையும் கைப்பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், அவரது கணவர் பிப்பின் சந்திரனிடமும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
