‘ஆன்லைன் செயலிகள் மூலம் ஒவ்வொரு இந்தியருக்கும் ஆபத்து’ – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் நிறுவப்பட்டுள்ள சீன சிசிடிவி கேமராக்கள் மற்றும் ஆன்லைன் செயலிகள் இந்தியர்களின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளன என்று கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.

பேஸ்புக்கில் வெளியிட்ட தனது பதிவில், இந்தியாவை “இருளில் வைத்திருக்கும் திட்டமிட்ட சதி” நடைபெற்று வருகிறது என அவர் குறிப்பிட்டார். பொதுமக்கள் பயன்பாட்டிற்கான சில சீன CCTV கேமராக்களை அரசு தடை செய்திருந்தாலும், அரசு கட்டிடங்களில் அவை இன்னும் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும், தடை செய்யப்பட்ட சீன செயலிகள் பெயரை மாற்றி மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுகின்றன என்றும், வெளிநாட்டு செயற்கை நுண்ணறிவு (AI) தளங்கள் இந்தியாவின் முக்கிய தரவுகளை சேமித்து செயலாக்கி வருகின்றன என்றும் அவர் எச்சரித்தார். இந்த விஷயங்களில் அரசு தெளிவான விளக்கம் அளிக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் அவர் எழுப்பிய முக்கிய கேள்விகள்:

  • இந்தியாவில் பயன்படுத்தப்படும் கேமராக்கள் எந்த நாடுகளில் தயாரிக்கப்பட்டவை?
  • அவற்றில் எத்தனை பாதுகாப்பு சான்றளிக்கப்பட்டவை?
  • எந்த வெளிநாட்டு AI தளங்கள் அரசுத் தரவுகளை செயலாக்குகின்றன?
  • தடை செய்யப்பட்ட செயலிகள் எந்த பெயர்களில் தொடர்ந்து இயங்குகின்றன?

ஆனால், அமைச்சகத்தின் பதிலில் எந்தத் தெளிவான தகவல்களும் இல்லை என்றும், ஒரு குறிப்பிட்ட தளத்தின் பெயர்கூட குறிப்பிடப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே, அரசு பயன்படுத்தும் சுமார் 10 லட்சம் சீன கேமராக்கள் தரவு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று ஒப்புக்கொண்டபோதும், இன்றும் அவை பாதுகாப்பானவையா என்பதை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை எனவும் அவர் விமர்சித்தார்.

தனது பதிவின் இறுதியில், மோடி தலைமையிலான மத்திய அரசு தனது தோல்விகளை மறைக்க முயற்சிப்பதன் மூலம், ஒவ்வொரு இந்திய குடிமகனின் பாதுகாப்பையும் ஆபத்தில் ஆழ்த்தி வருவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

Related News

Latest News