ரஷியாவைச் சேர்ந்த பயண புகைப்படக் கலைஞர் ஜூலியா புருலேவா சமீபத்தில் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடத்திய “பிங்க் நிற யானை” புகைப்படப்பிடிப்பு சமூக வலைதளங்களில் வைரலானது. ஆனால், அந்த புகைப்படங்களில் இடம்பெற்ற யானை கடந்த மாதம் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியதால், விலங்கு நல ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஜெய்ப்பூரில் ஆறு வாரங்கள் தங்கியிருந்த போது, நகரத்தின் பிங்க் நிற அடையாளம் தான் இந்த புகைப்படப்பிடிப்புக்கு ஊக்கமாக இருந்ததாக ஜூலியா கூறினார். இதன் ஒரு பகுதியாக, யஷஸ்வி என்ற மாடலுடன் இணைந்து, யானைக்கு பிங்க் நிறம் பூசி பாரம்பரிய பின்னணியில் புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாகவும், ராஜஸ்தானின் முக்கியச் சின்னமாக உள்ள யானைகள் இந்த திட்டத்தில் முக்கிய பங்காற்றியதாகவும் அவர் விளக்கினார்.
இந்த புகைப்படங்கள் வைரலானதும், யானைக்கு நிறம் பூசியது குறித்து சர்ச்சை எழுந்தது. அழகியல் நோக்கத்திற்காக விலங்குகளை பயன்படுத்துவது ஒழுக்கமற்றது என்று பலரும் விமர்சித்தனர்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த ஜூலியா, யானைக்கு பயன்படுத்திய நிறம் இயற்கையானது என்றும், திருவிழாக்களில் யானைகளுக்கு பயன்படுத்தப்படும் வண்ணமே இதற்கும் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறினார். மேலும், இந்த புகைப்படப்பிடிப்புக்கு முன் யானைகள் முகாமிற்கு பலமுறை சென்று தேவையான அனுமதி பெற்றே நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
புகைப்படம் எடுக்க சுமார் 10 நிமிடங்கள் மட்டுமே நிறம் பூசப்பட்டதாகவும், பின்னர் உடனே கழுவப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், சாச்சல் கடந்த பிப்ரவரி மாதம் உயிரிழந்தாலும், இந்த நிகழ்வால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.
இந்த விவகாரம் குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விலங்குகள் தவறாக பயன்படுத்தப்படுவதைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
