ஃப்ரூட் சாலட் சாப்பிடும் பழக்கம் இருக்கா? இந்த உண்மையை முதல்ல தெரிஞ்சுக்கோங்க!

பல வகையான பழங்களைச் சிறு துண்டுகளாக நறுக்கி, ஒன்றாகக் கலந்து ஃப்ரூட் சாலட் போல சாப்பிடுவது ஒரு பெரிய ட்ரெண்டாகிவிட்டது. இப்படிச் சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் ஒரே நேரத்தில் கிடைக்கும் என்று பலர் நம்புகிறார்கள். ஆனால் ஆயுர்வேதமும், நவீன அறிவியலும் இதற்கு மாறான கருத்தை கூறுகின்றன.

பல பழங்களை ஒன்றாகக் கலந்து சாப்பிடுவது உண்மையில் உடலுக்கு நன்மையா அல்லது தீமையா என்பதை புரிந்து கொள்வது அவசியம். ஒவ்வொரு பழத்துக்கும் தனித்தனி செரிமான நேரமும், தன்மையும் உள்ளது. தர்பூசணி, முலாம் போன்ற நீர்ச்சத்து அதிகமான பழங்கள் வயிற்றில் சென்றவுடன் சுமார் 20 நிமிடங்களிலேயே செரிமானமாகிவிடும். ஆனால் வாழைப்பழம், ஆப்பிள் போன்ற பழங்கள் செரிக்க அதிக நேரம் எடுக்கும்.

இந்த இரு வகை பழங்களையும் ஒன்றாகச் சாப்பிட்டால் பிரச்சனை ஏற்படும். விரைவாகச் செரிய வேண்டிய பழங்கள் வயிற்றில் நீண்ட நேரம் தங்கி புளிக்கத் தொடங்கும். இதனால் வாயுத் தொல்லை, நெஞ்செரிச்சல், வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகள் உருவாகலாம்.

அதேபோல இனிப்பான பழங்களையும் புளிப்பான பழங்களையும் சேர்த்து சாப்பிடுவது நல்லதல்ல. ஆரஞ்சு, திராட்சை போன்ற புளிப்பு தன்மை கொண்ட பழங்களை, மாம்பழம் அல்லது வாழைப்பழம் போன்ற இனிப்பான பழங்களுடன் சேர்த்தால், அது செரிமானத்திற்கு சிரமத்தை ஏற்படுத்தும்.

புளிப்பான பழங்கள் செரிமான அமிலத்தை அதிகரிக்கச் செய்கின்றன; அதே நேரத்தில் இனிப்பான பழங்கள் செரிமான செயல்முறையை மந்தமாக்கக்கூடும். இதனால் வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். மேலும், பழங்களையும் பாலையும் சேர்த்து குடிப்பது (மில்க் ஷேக் போன்றவை) சுவையாக இருந்தாலும், அது செரிமானத்திற்கு சுமையாக இருக்கலாம்.

பழங்களைச் சாப்பிடும் சரியான முறையைப் பார்க்கலாம். ஒரே நேரத்தில் ஒரு வகை பழத்தை மட்டும் சாப்பிடுவது மிகவும் நல்லது. இரண்டு வகை பழங்கள் சாப்பிட வேண்டுமென்றால், ஒரே தன்மை கொண்ட பழங்களை மட்டுமே சேர்த்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக, இனிப்பான பழங்களை இனிப்பான பழங்களுடன், புளிப்பான பழங்களை புளிப்பான பழங்களுடன் சேர்த்து சாப்பிடலாம்.

Related News

Latest News