தற்போது கோடைக் காலம் என்பதால் பழங்களை பலரும் அதிகமாக வாங்கி சாப்பிடுவார்கள். குறிப்பாக, தர்பூசணியை பலரும் வாங்கி உட்கொள்வார்கள். கோடை காலத்தில் உடலை நீரேற்றமாக வைத்திருக்க இந்த தர்பூசணி மிகவும் உதவியாக இருக்கும்.
தர்ப்பூசணியில் 92 சதவீதம் நீர் இருக்கிறது. உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கவும் உதவும். நீரிழப்பையும் தடுக்கும். தர்ப்பூசணியில் லைகோபீன், ஆன்டி ஆக்சிடென்டுகள், வைட்டமின்கள் ஏ,சி, பொட்டாசியம் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. இதில் கலோரியும் குறைவு. அதனால் உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
நிறைய பேர் தர்ப்பூசணி பழத்தை துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் சேமித்து வைத்து சாப்பிடுவார்கள். அப்படி செய்தால் அதன் ஊட்டச்சத்து மதிப்பு குறைவதற்கு வழிவகுத்துவிடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படும் தர்ப்பூசணியை விட அறை வெப்பநிலையில் வைக்கப்படும் தர்ப்பூசணியில் அதிக சத்துக்கள் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
துண்டுகளாக வெட்டப்பட்ட தர்ப்பூசணியையும் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால் பாக்டீரியாக்கள் வளரும் இடமாக அது மாறிவிடும்.
குளிர்ந்த தர்பூசணியில் இருக்கும் பாக்டீரியாக்கள் குடலுக்கு தீங்கை ஏற்படுத்தும். இதனால், வயிறு பிரச்சனைகள் மற்றும் செரிமான பிரச்சனைகள் ஏற்படும். தர்ப்பூசணியை இன்னும் குளிர்ச்சியாக சாப்பிட விரும்பினால் ஸ்மூத்தி, மில்க் ஷேக் வடிவில் ருசிக்கலாம்.
