நெய் சாப்பிட்டா கொலஸ்டிரால் அதிகமாகுமா? தினமும் எவ்ளோ சாப்பிட்டால் நல்லது?

நெய்யில் அதிக அளவு கொழுப்பு அமிலங்கள் உள்ளன என்பது உண்மை. ஆனால் அவை அனைத்தும் உடலுக்கு தீங்கு விளைவிப்பவை அல்ல. மாறாக, சரியான அளவில் எடுத்துக்கொண்டால் இதய ஆரோக்கியத்துக்கு உதவக்கூடிய நல்ல கொழுப்புகளும் இதில் உள்ளன. அளவுக்கு மீறி எடுத்துக்கொள்ளும்போது மட்டுமே கொலஸ்டிரால் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. தினமும் ஒரு ஸ்பூன் அளவில் எடுத்துக்கொண்டால் அது இதயத்தை பாதுகாக்க உதவும்.

நெய்யில் மீடியம் செயின் மற்றும் ஷார்ட் செயின் ஃபேட்டி ஆசிட்கள் உள்ளன. இவை உடலின் மெட்டபாலிசத்தை (metabolism) மேம்படுத்த உதவுகின்றன. மேலும் கொழுப்பில் கரையும் வைட்டமின்களான வைட்டமின் A, D, E, K போன்றவை நெய்யில் நிறைந்துள்ளன. இதனால் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துகள் கிடைக்கின்றன.

தமிழர்களின் பாரம்பரிய உணவுமுறையில் நெய் முக்கிய இடம் பெற்றிருந்தது. நம் முன்னோர்கள் நெய்யை அளவோடு பயன்படுத்தினார்கள். அதே நேரத்தில் அவர்கள் அதிக உடல் உழைப்பில் ஈடுபட்டிருந்தனர். ஒரே இடத்தில் அமர்ந்து இருப்பது குறைவாக இருந்ததால், அவர்கள் எடுத்துக்கொண்ட நெய்யின் நன்மைகளை முழுமையாக பெற்றனர்.

இப்போது இந்தியர்களிடம் அதிகமாக காணப்படும் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் மற்றும் இதய நோய்களுக்கு நெய் மட்டும் காரணம் அல்ல. முக்கிய காரணம் உடல் செயல்பாடுகள் குறைவாக இருப்பதுதான். உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறை தான் இந்நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.

நெய் பிடிக்காதவர்கள் அல்லது லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் மாற்றாக கடுகு எண்ணெய், ஆலிவ் ஆயில், கடலை எண்ணெய் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். ஆனால் அவற்றையும் அளவோடு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

மொத்தத்தில், நெய்யை தினசரி உணவில் மிதமான அளவில் சேர்த்து, அதே சமயம் உடல் இயக்கம் அதிகமாக இருக்கும்படி வாழ்க்கை முறையை பின்பற்றினால் நல்ல ஆரோக்கிய பலன்கள் கிடைக்கும்.

Related News

Latest News