பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 20 முதல் கிண்டி சிறுவர் பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக வேளச்சேரி, அடையார், திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் பல காகங்கள் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வக பரிசோதனைகளில் பறவைக் காய்ச்சல் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில், தமிழக சுகாதாரத் துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இதுவரை தமிழகத்தில் மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை என்பதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. எனினும், சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உடல்நலக் குறைபாடு உள்ள பறவைகள் அல்லது இறந்த பறவைகளை கையாள்பவர்கள், மேலும் இறைச்சிக் கடைகளில் பணிபுரிபவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். ஏதேனும் பறவைகள் இறந்த நிலையில் காணப்பட்டால் உடனடியாக கால்நடை மருத்துவத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
முழுமையாக வேகவைக்காத முட்டை மற்றும் இறைச்சி வகைகளை சாப்பிடாமல் தவிர்க்க வேண்டும். இறைச்சிக் கடைகளில் கழிவுகளை வெளியில் கொட்டுவது தவிர்க்கப்பட வேண்டும். மேலும், பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு செல்லாமல் இருக்க வேண்டும்.
பறவைக் காய்ச்சல் என்பது பறவைகளுக்குள் பரவும் வைரஸ் நோயாகும். சில நேரங்களில் இது மனிதர்களுக்கும் பரவ வாய்ப்பு உள்ளது. பறவைக் காய்ச்சலின் பொதுவான அறிகுறிகள் அதிக காய்ச்சல், இருமல், தொண்டை வலி, உடல் சோர்வு மற்றும் தலைவலி ஆகியவையாகும். சிலருக்கு கண்கள் சிவத்தல், மூச்சுத் திணறல், நெஞ்சு வலி போன்ற அறிகுறிகளும் காணப்படலாம். சிகிச்சை தாமதமானால் நிமோனியா அல்லது மூச்சுக் கோளாறு போன்ற தீவிர பிரச்சினைகள் ஏற்படலாம்.
பறவைக் காய்ச்சல் ஒரு மனிதரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் வாய்ப்பு மிகவும் குறைவு. இருப்பினும், தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பை தவிர்ப்பது பாதுகாப்பானது.
