புதிய இண்டக்ஷன் அடுப்பு வாங்கப்போறீங்களா? இது தெரியாம வாங்காதீங்க..!

தமிழ்நாட்டில் தற்போது கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஒரு பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இதனால் பல வீடுகளில் காலை நேர அவசரத்தில் சமையல் வேலை பாதியிலேயே நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் நமக்கு உதவியாக இருக்கும் மாற்று வசதி இண்டக்ஷன் அடுப்பாகும். கேஸ் அடுப்புடன் ஒப்பிடும்போது, இதில் பல உணவுகளை விரைவாக சமைத்துவிட முடியும் என்பதும் ஒரு பெரிய நன்மையாகும்.

புதிய இண்டக்ஷன் அடுப்பு வாங்க திட்டமிட்டிருந்தால் கவனிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்களை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு இண்டக்ஷன் அடுப்பு வாங்கும்போது முதலில் பார்க்க வேண்டியது அதன் பவர் திறன். வாட்டேஜ் அதிகமாக இருந்தால் சமையல் வேகமாக முடியும். இந்திய சமையல் முறைக்கு பொதுவாக 1800 முதல் 2000 வாட்ஸ் பவர் கொண்ட இண்டக்ஷன் அடுப்புகள் மிகவும் ஏற்றதாக கருதப்படுகின்றன. இவை சமையலை வேகமாக முடிப்பதுடன், மின்சார செலவையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும்.

தோசை சுடுவது, பால் காய்ச்சுவது, டீ தயாரிப்பது அல்லது குழம்பு வைப்பது போன்ற பல வகையான சமையல்களுக்கு வெவ்வேறு வெப்பநிலைகள் தேவைப்படும். அதனால் தென்னிந்திய சமையலுக்கு ஏற்ற ப்ரீசெட் மெனு பட்டன்கள் கொண்ட மாடல்களை தேர்வு செய்தால் சமையல் செய்யும் போது வெப்பநிலையை அடிக்கடி மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது. இது வேலைகளை எளிதாக்கும்.

வீட்டில் சிறு குழந்தைகள் இருந்தால் ‘சைல்ட் லாக்’ வசதி உள்ள மாடல்களை வாங்குவது மிகவும் அவசியம். மேலும், அடுப்பின் மீது பாத்திரம் இல்லாதபோது அல்லது பாத்திரம் அதிகமாக சூடானால் தானாகவே அணைந்து விடும் ‘ஆட்டோ கட்-ஆஃப்’ வசதி இருந்தால் பாதுகாப்பாக இருக்கும். அதோடு மின்சார வோல்டேஜ் ஏற்ற இறக்கங்களை தாங்கக்கூடிய மாடல்களை தேர்வு செய்தால் நீண்ட காலம் பயன்படுத்த முடியும்.

இண்டக்ஷன் அடுப்பின் மேற்பரப்பு வலுவான மைக்ரோ கிரிஸ்டல் கிளாஸ் மூலம் செய்யப்பட்டிருக்க வேண்டும். இது சுத்தம் செய்வதற்கும் எளிதாக இருக்கும். அதேபோல், நாம் பயன்படுத்தும் அகலமான பாத்திரங்கள் முழுவதும் சூடாகும் வகையில் பேனல் அளவு சற்றுப் பெரியதாக இருக்கும் மாடல்களை தேர்வு செய்வது சிறந்தது.

எதிர்பாராத கேஸ் தட்டுப்பாடு போன்ற சூழ்நிலைகளில் ஒரு தரமான இண்டக்ஷன் அடுப்பு வீட்டில் இருப்பது சமையல் வேலைகளை சுலபமாக்கும். இன்று பல நல்ல மாடல்களை ஆன்லைனில் ஒப்பிட்டு பார்த்து, உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ப பொருத்தமானதை தேர்வு செய்து வாங்கலாம். இதன் மூலம் சமையல் வேலையை இனி எளிதாகவும் வேகமாகவும் செய்து முடிக்கலாம்.

Related News

Latest News