தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களில் வெப்பநிலை சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம், பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 10: கோயம்புத்தூர் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும். தென் மாவட்டங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளது.
அக்டோபர் 11 முதல் 13 வரை: நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, மதுரை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். பிற பகுதிகளிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
அக்டோபர் 14, 15: தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அக்டோபர் 16: நீலகிரி, கோயம்புத்தூர் மலைப்பகுதிகள், தேனி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் பல மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதற்கிடையில், அக்டோபர் 10 முதல் 14 வரை வடக்கு உள் தமிழகத்தில் சில இடங்களில் வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகரில் இன்று, நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34–35 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27–28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
