சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், பூந்தமல்லி – வடபழனி இடையிலான புதிய மெட்ரோ ரயில் சேவை நாளை தொடங்கப்பட உள்ளது. இதனைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி சென்னை வருகிறார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
தற்போது, இந்த வழித்தடத்தில் முதற்கட்டமாக 11 மெட்ரோ ரயில் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன. பூந்தமல்லி பைபாஸ், பூந்தமல்லி பேருந்து நிலையம், பூந்தமல்லி அரசு மருத்துவமனை, காரைச்சாவடி, குமணஞ்சாவடி, காட்டுப்பாக்கம், ஐயப்பன்தாங்கல், ராமச்சந்திரா மருத்துவமனை, போரூர் பைபாஸ், போரூர் ஜங்ஷன் மற்றும் வடபழனி ஆகியவை இந்த நிலையங்களாகும்.
வடபழனி – போரூர் இடையே சாலிகிராமம், ஆழ்வார் திருநகர், வளசரவாக்கம், காரம்பாக்கம், ஆலப்பாக்கம் ஆகிய நிலையங்களில் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இவை சில மாதங்களில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய வழித்தடத்தில் அதிகபட்சமாக ரூ.40 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொடக்க நாட்களிலேயே தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பயணிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து கூடுதல் ரயில்களை இயக்குவது குறித்து மெட்ரோ நிர்வாகம் ஆய்வு செய்ய உள்ளது. பிரதமர் வருகையை முன்னிட்டு சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
