தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்–2 பொதுத் தேர்வு : வெளியான முக்கிய அறிவிப்பு

சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாத முதல் வாரத்தில் நடைபெற உள்ளதால், பொதுத் தேர்வுகளை முன்கூட்டியே நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான தேர்வு அட்டவணையை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்–2 பொதுத் தேர்வு நாளை மறுநாள் 2ஆம் தேதி தொடங்கி 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தேர்வை மொத்தம் 8 லட்சத்து 27 ஆயிரத்து 475 பேர் எழுதுகின்றனர். இதில் பள்ளி மாணவர்கள் 7 லட்சத்து 99 ஆயிரத்து 692 பேரும், தனித்தேர்வர்கள் 27 ஆயிரத்து 783 பேரும் அடங்குவர். 7,545 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 3,412 தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர்.

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 11ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி முடிவடைகிறது. கடந்த ஆண்டு பிளஸ்–1 தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 3ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

பிளஸ்–2 பொதுத் தேர்வை 4,540 பறக்கும் படையினர் கண்காணிக்கின்றனர். மேலும், 44,624 பேர் தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தேர்வு எழுதும் மாணவர்களின் வசதிக்காக அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. தேர்வு மையங்களில் மின்தடை ஏற்படாத வகையில் மின்சார வாரியம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளது.

தேர்வு மையங்களில் ஒழுங்கீனங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வுத்துறை எச்சரித்துள்ளது. ஆள் மாறாட்டம், விடைத்தாள் மாற்றுதல், நகலெடுப்பு போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டால், 3 ஆண்டுகள் தேர்வு எழுதத் தடை விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News