தமிழ்நாடு சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, வீடு கட்டும் திட்டம் தொடர்பாக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே பரபரப்பான விவாதம் நடைபெற்றது.
தி.மு.க. எம்.எல்.ஏ. ஐ. பெரியசாமி பேசுகையில், வீடு கட்டும் திட்டத்தில் பெயரை மாற்றியதுடன், வழங்கப்படும் வீடுகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆனந்த், வீடு கட்டும் திட்டத்தில் பல்வேறு தவறுகள் நடைபெற்றுள்ளதாக திட்டவட்டமாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ஐ. பெரியசாமி, திட்டத்தில் தவறுகள் இருப்பதாக கூறி அதை நிறுத்திவிடக் கூடாது என்றும், கட்சி, சாதி, மத பாகுபாடின்றி விண்ணப்பித்த அனைவருக்கும் வீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தினால் அரசின் செலவையும் குறைக்க முடியும் எனக் கூறினார்.
இதையடுத்து அமைச்சர் ராஜ்மோகன் பேசும்போது, கடந்த ஆட்சியில் தவறுகள் ஏற்பட்டிருக்கலாம் என ஐ. பெரியசாமி ஒப்புக்கொண்டதற்கு நன்றி தெரிவித்தார்.
பின்னர் பேசிய முதலமைச்சர் விஜய், முந்தைய ஆட்சியில் மூன்று துறைகள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்ட அறிக்கைகள் தன்னிடம் இருப்பதாக தெரிவித்தார். அந்த கோப்புகளில் ஆதாரங்கள் இருப்பதாகவும், அவற்றை எப்போது வெளியிட வேண்டும் என்பது தனக்குத் தெரியும் என்றும் கூறினார். மேலும், மக்களிடம் என்ன பேச வேண்டும், எப்படி பேச வேண்டும் என்பதும் தனக்குத் தெரியும் என அவர் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த ஐ. பெரியசாமி, தான் அன்புடனும் அக்கறையுடனும் மக்களிடம் பேசியதால்தான் ஏழு முறை எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றதாக கூறினார்.
