தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 60 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்

நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் அவர்களின் உத்தரவின்படி, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் விற்பனை மற்றும் கடத்தலை தடுக்கும் நடவடிக்கைகள் நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, வெளிப்பாளையம் காவல் ஆய்வாளர் தலைமையில் வெளிப்பாளையம் ரயிலடி கடற்கரைச் சாலை காடம்பாடி அருகில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. அப்போது அந்த வழியாக வந்த முகமது இப்ராஹிம் மற்றும் செய்யது யூசுப் ஆகியோர் வசம் இருந்த 60 கிலோ அளவிலான தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மூன்று சக்கர மற்றும் இரண்டு சக்கர வாகனங்களும், கைப்பேசியும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் குறித்த நபர்கள் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

Related News

Latest News