Wednesday, February 25, 2026

தோழர் நல்லக்கண்ணு மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் நல்லக்கண்ணு இன்று காலமானார். உடல்நலக் கோளாறுகளால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கடந்த 20க்கும் நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்றுவந்தநிலையில், இன்று 1.55 மணியளவில் காலமானார். இவரது மறைவு தமிழ்நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள், கட்சியினர் என அனைத்து தரப்பு மக்களும் தங்கள் இரங்கல்களை பதிவுசெய்து வருகின்றனர்.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா இரங்கல்

நேர்மையான அரசியல்வாதி.. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தூணாக விளங்கியவர் நல்லகண்ணு லஞ்சம், ஊழலுக்கு அப்பாற்பட்ட நேர்மையான அரசியல்வாதியாக தன்னை நிலைநிறுத்தியவர்; பொதுமக்களின் நலனுக்காக போராடிய நல்லகண்ணுவின் சேவை என்றும் நினைவு கூறப்படும்.

நடிகரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் இரங்கல்

தனக்கென்று ஒரு வாழ்க்கை என்ற சிந்தையே இல்லாதவர்; பொதுநலத்துக்கென்றே சகலத்தையும் அர்ப்பணித்து வாழ்ந்தவர்; இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தோழர் நல்லகண்ணு ஐயா நம்மிடமிருந்து விடைபெற்றுக்கொண்டார்.

ஏழை எளிய மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோரின் நலன்களுக்காக 80 ஆண்டு காலம் அயர்வே இல்லாமல் களத்தில் நின்றவர். நேர்மைக்கும் தூய்மைக்கும் எளிமைக்கும் அரசியல் நாகரீகத்துக்கும் ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தவர். தகைசால் தமிழரே, செவ்வணக்கம். உமது புகழ் நிலைக்கட்டும். உமது பணிகள் எம்மில் தொடரட்டும்.

தவெக தலைவர் விஜய் இரங்கல்

சுதந்திரப் போராட்ட வீரர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், விவசாயிகளுக்காகவும் மக்களின் உரிமைகளுக்காகவும் தம் வாழ்நாளின் பெரும் பகுதியைச் செலவிட்ட போராளி, தோழர் அய்யா இரா.நல்லகண்ணு அவர்கள் காலமான செய்தியறிந்து மன வேதனை அடைந்தேன். அவரது இழப்பு, இந்த நாட்டிற்கும் கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரைப் பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த தோழர், அய்யா இரா. நல்லகண்ணு அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

நடிகர் ரஜினிகாந் இரங்கல்

மாறாத கொள்கைப் பிடிப்புடன் வாழ்ந்து மறைந்த தோழர் திரு. நல்லகண்ணு அவர்களின் இழப்பு தமிழக மக்களுக்கு ஈடு செய்ய முடியாதது. அவரது ஆத்மா சாந்தியடையட்டும். ஆழ்ந்த அனுதாபங்கள் என்று கூறியுள்ளார்.

பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இரங்கல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ஐயா திரு. நல்லகண்ணு அவர்கள், உடல்நலக்குறைவு காரணமாக தமது 101-வது வயதில் இயற்கை எய்தினார் என்ற தகவல் மிகுந்த மன வேதனையளிக்கிறது. அன்னாரின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைக் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக இளம் வயதிலேயே அரசியலில் அடியெடுத்து வைத்து, நாட்டின் சுதந்திரத்திற்காகவும், அனைத்துத் தரப்பு மக்களின் உரிமைகளுக்காகவும் நூற்றுக்கணக்கான போராட்டங்களை முன்னெடுத்ததோடு, வாழும் வரை எளிமையின் அடையாளமாகவே அறியப்பட்டவர் ஐயா திரு. நல்லகண்ணு அவர்கள். அன்னாரின் பொதுச்சேவையும் அர்ப்பணிப்பும் மக்கள் மனதிலும் அரசியல் வரலாற்றிலும் என்றும் நீங்கா இடம்பிடித்திருக்கும்! ஓம் சாந்தி! என கூறியுள்ளார்.

தவெக பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் இரங்கல்

பாராண்ட மன்னரைக் காட்டிலும் நூறாண்டு கண்ட தோழர் நல்லக்கண்ணு புகழின் உச்சத்தைத் தொட்டவர்; தியாகத்திற்கு சதை வடிவம் தந்தவர்; சரித்திரப் பேரேட்டில் பல அத்தியாயங்களுக்குப் பேசப்பட வேண்டியவர். மணல் மாஃபியாக்களுக்கு எதிராக களத்தில் நின்றவர். சிவப்பை உவப்பாகக் கொண்டவர்; மறைந்தது லட்சியவாதிகளுக்கு இழப்பு; தாய் தமிழகத்திற்கு பேரிழப்பு. அவரை இழந்து தவிக்கும் செங்கொடி தோழர்களுக்கும், அவர் மகள் ஆண்டாளுக்கும் என்னுடைய ஆழ்ந்த அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறேன்.

Related News

Latest News