மயிலாடுதுறை நகரில் 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் கடந்த 18 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. ஆனால் கட்டுமான பணிகளில் ஏற்பட்ட குறைபாடுகள் மற்றும் போதிய பராமரிப்பு இல்லாமை காரணமாக நகரின் பல பகுதிகளில் சாலைகள் இடிந்து பாதாள சாக்கடை உள்வாங்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதுவரை 30க்கும் மேற்பட்ட இடங்களில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவற்றை தற்காலிகமாக சரிசெய்தாலும், மீண்டும் உள்வாங்கும் நிலை தொடர்கதையாக மாறியுள்ளது.
இந்த நிலையில், மயிலாடுதுறையிலிருந்து தரங்கம்பாடி நோக்கி சென்ற சுமை ஏற்றிய லாரி ஒன்று சின்னகடை தெருவில் சென்று கொண்டிருந்தபோது சாலை திடீரென உள்வாங்கியது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. சம்பவத்தையடுத்து அந்தப்பகுதியில் போக்குவரத்து மாற்றுப்பாதைக்கு மாற்றப்பட்டது.
சம்பவ இடத்திற்கு நகராட்சி தலைவர் செல்வராஜ் மற்றும் மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிவசெந்தில்குமார் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். பாதாள சாக்கடை பழுது நீக்கும் பணிகள் அவசரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
