Sunday, February 22, 2026

உலக நாடுகளை மிரட்டிய டிரம்ப்-ஐ கதிகலங்க வைத்த இந்தியர் : யாருன்னு பாருங்க..!!

“வரி” என்ற ஒரே வார்த்தையை முன்வைத்து பல உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த அமெரிக்க அதிபர் டிரம்புக்கு, அந்நாட்டு உச்சநீதிமன்றம் மிக முக்கியமான பாடம் கற்பித்துள்ளது.

அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் அதிக இறக்குமதி வரி விதித்து வருகின்றன. ஆனால் அமெரிக்கா, அந்த நாடுகளின் பொருட்களை ஒப்பீட்டளவில் குறைந்த வரியிலேயே வாங்குகிறது என்று கூறிய டிரம்ப், அதிபராக பதவியேற்ற உடனே “போட்டி வரி” விதிப்பேன் என்று அறிவித்தார். அதன்படி இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பொருட்களுக்கு கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்பட்டது. குறிப்பாக இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீதம் வரை வரி உயர்த்தப்பட்டது.

இதன் விளைவாக இந்தியாவில் பல தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. தமிழ்நாட்டின் திருப்பூர், கரூர், ஈரோடு போன்ற மாவட்டங்களில் உள்ள ஜவுளி உற்பத்தியாளர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளானார்கள். மேலும், பல மாவட்டங்களில் தோல் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி நிறுவனங்களும் இந்த 50 சதவீத வரி உயர்வால் பெரும் பாதிப்பை சந்தித்தன.

இந்த சூழ்நிலையில், டிரம்ப் விதித்த போட்டி வரி அரசியலமைப்புக்கு எதிரானது என்று கூறி அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அதிபருக்கு தனிப்பட்ட முறையில் வரி விதிக்கும் அதிகாரம் இல்லை என்று தீர்ப்பளித்து, அந்த வரி நடவடிக்கைகளை ரத்து செய்தனர். இந்த தீர்ப்பு டிரம்புக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

உலக நாடுகள் பலவும் வரவேற்கக்கூடிய இந்த முக்கிய தீர்ப்புக்கு காரணமாக இருந்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வழக்கறிஞர் நீல் கத்தியால். அவர் வலுவான மற்றும் சட்ட அடிப்படையிலான வாதங்களை முன்வைத்து, டிரம்பின் வரி விதிப்பு அரசியலமைப்புக்கு முரணானது என்பதை நிரூபித்தார்.

அமெரிக்க அரசியலமைப்பின் படி, வரி விதிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே உண்டு. நுகர்வோர் மற்றும் வணிகர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திய இந்த வரி சட்டவிரோதமானது என்று நீல் கத்தியால் வாதிட்டார். அவரது உறுதியான வாதங்களே இந்த வரி ரத்து செய்யப்படுவதற்கும், டிரம்புக்கு எதிரான தீர்ப்பு வெளிவருவதற்கும் முக்கிய காரணமாக அமைந்தன.

இந்த தீர்ப்புக்குப் பிறகு தனது சமூக வலைதளப் பதிவில், “அதிபர்கள் அதிகாரம் பெற்றவர்கள் தான்; ஆனால் அமெரிக்க அரசியலமைப்பு அதைவிட வலிமையானது” என்று நீல் கத்தியால் குறிப்பிட்டுள்ளார்.

நீல் கத்தியாலின் பெற்றோர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் 1960களில் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர். அவரது தந்தை சுரேந்தர் ஒரு பொறியாளர்; தாயார் பிரதீபா ஒரு மருத்துவர். 1970ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோ நகரில் பிறந்த நீல் கத்தியால், அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் சொலிசிட்டர் ஜெனரலாகவும் பணியாற்றியவர். மேலும், அவர் அமெரிக்க நீதித்துறையின் உயரிய விருதுகளை பெற்றுள்ளார். தற்போது ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தின் சட்டக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

Related News

Latest News

error: Content is protected !!