தமிழகத்தில் 10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி மாற்றம் இருக்குமா என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
2025-26ஆம் கல்வி ஆண்டிற்கான 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த நவம்பர் மாதமே வெளியானது. அதன்படி, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2ஆம் தேதி தொடங்குகிறது. மேலும், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 11ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
12ஆம் வகுப்பிற்கு மார்ச் 2ஆம் தேதி முதல் மார்ச் 26ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன்படி, மார்ச் 2ஆம் தேதி தமிழ் பாடத்தேர்வு, மார்ச் 5ஆம் தேதி ஆங்கிலம், மார்ச் 9ஆம் தேதி வேதியில்இ, கணக்கியல், புவியியல், மார்ச் 13ஆம் தேதி இயற்பியல், பொருளதாரம், மார்ச் 17ஆம் தேதி கணிதம், விலங்கியல், வணிகம் நடைபெறும்.
மார்ச் 23ஆம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், புள்ளி விவரங்கள், மார்ச் 26ஆம் தேதி கணினி அறிவியல், கணினி பயன்பாடு, உயிரி வேதியியல் ஆகியவை நடைபெறும். இதற்கான முடிவுகள் மே 8ஆம் தேதி வெளியாகும்.
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 11ம் தேதி தமிழ், மார்ச் 16ஆம் தேதி ஆங்கிலம், மார்ச் 25ஆம் தேதி கணிதம், மார்ச் 30ஆம் தேதி அறிவியல், ஏப்ரல் 2ஆம் தேதி சமூக அறிவியல், ஏப்ரல் 6ஆம் தேதி விருப்ப மொழித் தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.
இந்தாண்டு தேர்தல் நடைபெற உள்ளதால் 10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாற்றம் இருக்குமா என்ற கேள்வி எழுந்து வருகிறது. இந்த நிலையில், அதற்கு தற்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்வு நெருங்கி வருவதால், பள்ளிக்கல்வித்தறை அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று ஆலோசனை நடத்தினார். இதன்பின்பு, அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, பொதுத் தேர்வு தேதிகள் குறித்து விளக்கம் அளித்தார்.
தமிழகத்தில் 10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளில் எந்த மாற்றமும் இருக்காது. பொதுத்தேர்வுக்கு பின்பே தேர்தல் வருதால், தேர்வு பணிகளில் ஆசிரியர் பணியாற்றுவதில் எந்த பாதிப்பு இருக்காது. தேர்தல் ஆணையத்துடன் கலந்து ஆலோசனை நடத்திய பிறகே தமிழகத்தில் பொதுத் தேர்வு தேதி இறுதி செய்யப்பட்டன என அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
