தமிழக அரசு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் பல்வேறு திறன் மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் அதாவது தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு துறைவாரியான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஏஐ, தகவல் தொழில்நுட்பம், ஹோட்டல் மேனேஜ்மெண்ட், டிசைனிங், பேஷன், பேக்கரி உள்ளிட்ட பல துறைகளில் பயிற்சி அளித்து, வேலைவாய்ப்புகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வரிசையில், தாட்கோ மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஒப்பனை மற்றும் அழகுக்கலை தொடர்பான Cosmetology (காஸ்மடாலஜி), Aesthetic (ஏஸ்தடிக்) மற்றும் Dermaplanning (டெர்மாபிளானிங்) பயிற்சி வகுப்புகளை அறிவித்துள்ளது. இந்த பயிற்சி 90 நாட்கள் நடைபெறும்.
ராணிப்பேட்டை மற்றும் கோவை மாவட்டங்களில் பயிற்சி மையங்கள் செயல்படும். பயிற்சியில் சேரும் இளைஞர்களுக்கு தங்குமிடம், உணவு உள்ளிட்ட வசதிகள் தாட்கோ சார்பில் இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். 8ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை கல்வி பெற்றிருக்கலாம். வயது வரம்பு 18 முதல் 35 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
பயிற்சி நிறைவடைந்த பின் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு பெறுவர். மாதம் ரூ.18,000 முதல் ரூ.25,000 வரை ஊதியம் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் திரையில் கொடுக்கப்பட்டுள்ள tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். சுயதொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
