இந்தியாவில் டிஜிட்டல் முறையிலான பணப்பரிவர்த்தனைகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அதனுடன் சேர்ந்து டிஜிட்டல் மோசடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
யுபிஐ, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங் போன்ற வசதிகள் மூலம், நாம் இருக்கும் இடத்திலிருந்தே ஒரு கிளிக்கில் லட்சக்கணக்கான ரூபாயை மற்றொரு வங்கி கணக்கிற்கு அனுப்ப முடிகிறது. இந்த எளிமையான வசதிகளே மோசடியாளர்களுக்கும் சாதகமாக மாறி, பண மோசடிகளை செய்ய எளிதாக்கியுள்ளது.
போலியான லிங்குகளை அனுப்பி கிளிக் செய்ய வைப்பது, ஓடிபி மூலம் பணத்தை திருடுவது போன்ற புதிய புதிய யுக்திகளை மோசடியாளர்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். வாடிக்கையாளர் தரப்பில் எந்த தவறும் இல்லாத போதிலும், இவ்வாறு இழந்த பணத்தை மீண்டும் பெறுவது மிகவும் கடினமானதாக உள்ளது. பல சந்தர்ப்பங்களில் இழந்த தொகை திரும்ப கிடைக்காததே உண்மை.
இந்த சூழ்நிலையில், டிஜிட்டல் மோசடிகளில் இருந்து வாடிக்கையாளர்களை பாதுகாக்கும் வகையில் ரிசர்வ் வங்கி ஒரு புதிய நடவடிக்கையை அறிவித்துள்ளது. மும்பையில் நடைபெற்ற நிதிக் கொள்கை குழு கூட்டத்திற்கு பிறகு, ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மால்ஹோத்ரா செய்தியாளர்களிடம் பேசும்போது, டிஜிட்டல் மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் புதிய விதிமுறைகள் விரைவில் கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவித்தார்.
இந்த புதிய விதிமுறைகளின் படி, டிஜிட்டல் மோசடிகளில் பணத்தை இழந்தவர்களுக்கு ரூ.25,000 வரை இழப்பீடு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். இதற்கான விதிமுறை வரைவினை ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிட உள்ளது.
இந்த விதிமுறைகள் அமலுக்கு வந்தால், டிஜிட்டல் மோசடிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.25,000 வரை இழப்பீடு கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். இது முதற்கட்டமாக குறைந்த மதிப்பு கொண்ட பரிவர்த்தனைகளுக்கு பொருந்தும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
பெரும்பாலான மோசடி கும்பல்கள் மூத்த குடிமக்களை குறி வைப்பதால், அவர்களுக்காக ஓடிபியுடன் பின் நம்பர், பாஸ்வேர்டு அல்லது பயோமெட்ரிக் போன்ற கூடுதல் சரிபார்ப்பு நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்படலாம்.
இந்த புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தால், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மேலும் பாதுகாப்பாக மாறும். மோசடி ஏற்பட்டாலும் இழப்பீடு கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.
