Wednesday, February 4, 2026

தனியாக அழைத்த கள்ளக்காதலன்., நம்பி சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

கர்நாடக மாநிலம் விஜயநகர் மாவட்டம் சப்லகட்டா போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் உமா (28). இவருக்கும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ராமாஞ்சேநயா என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, உமா தனது கணவரை பிரிந்து, இரண்டு குழந்தைகளுடன் சப்லகட்டாவில் உள்ள தனது தாயின் வீட்டில் வசித்து வந்தார். ஒரு குழந்தை தந்தையுடன் இருந்து வந்தது.

உமா ரெயில்வே கேண்டீன் ஒன்றில் வேலை செய்து வந்தார். அப்போது, காஜா உசேன் (28) என்பவருடன் உமாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து, காஜா உசேன் இரவு நேரங்களில் அடிக்கடி உமாவின் வீட்டிற்கு வந்து சென்றதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், உமா காஜா உசேனிடம் கடனாக பணம் பெற்றிருந்ததாகவும், அதை திருப்பி கேட்டு அவர் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தன்று இரவு, காஜா உசேன் உமாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனிமையில் சந்திக்க அழைத்துள்ளார். அதன்படி, உமா தனது வீட்டின் அருகே உள்ள ஒரு காலி இடத்திற்கு சென்றார். அங்கு வந்த காஜா உசேன் பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். உமா பணம் இல்லை என கூறியதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த காஜா உசேன், தன்னிடம் மறைத்து வைத்திருந்த கத்தியால் உமாவின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக சப்லகட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் காஜா உசேனை கைது செய்த போலீசார், விசாரணையில் அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related News

Latest News