ஜார்க்கண்ட் மாநிலம் கோயில்கேரா பகுதியில் குந்த்ரா என்ற நபர் வனப்பகுதிக்குள் மரத்தால் கட்டப்பட்ட வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவருக்கு மனைவி மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில், நள்ளிரவு நேரத்தில் காட்டு யானை ஒன்று அவரது வீட்டுக்குள் புகுந்தது. அந்த யானை தாக்கியதில் குந்த்ரா மற்றும் அவரது இரு மகள்கள் உயிரிழந்தனர். யானையின் தாக்குதலில் இருந்து தாய் தப்பித்துக் கொண்டார். மற்றொரு மகள் யானை தாக்கியதில் பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் காட்டு யானைகள் தாக்கியதில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதால், அந்தப் பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
