துப்பாக்கிச்சூட்டில் காங்கிரஸ் பிரமுகர் பலி- பாஜக எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு

கர்நாடக மாநிலம், பெல்லாரி நகரில் வால்மீகி சிலை அமைக்கப்பட்டு, அதன் திறப்புவிழா நடைபெற உள்ளதால், காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டன. அதேபோல், முன்னாள் மத்திய அமைச்சரும் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுமான ஜனார்த்தன ரெட்டியின் வீட்டின் முன்பும் காங்கிரஸ் பேனர் வைக்கப்பட்டது.

இதைக் கண்ட ஜனார்த்தன ரெட்டியின் ஆதரவாளர்கள் அந்த பேனரை கிழித்து அகற்றினர். இதையடுத்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அங்கு திரண்டு வந்து பா.ஜ.க. ஆதரவாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது நாராபாத்ரெட்டியின் ஆதரவாளரான சதீஷ் ரெட்டி திடீரென வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. தரப்புகளுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் காங்கிரஸ் பிரமுகர் ராஜசேகர் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தார். அவரை யார் சுட்டார் என்பது இன்னும் தெரியவில்லை.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு பதற்றம் அதிகரித்து, சிலர் ஜனார்த்தன ரெட்டியின் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் தடியடி நடத்தியும், பின்னர் கண்ணீர்புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைத்தனர். நிலைமை கட்டுக்கடங்காததால் அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஜனார்த்தன ரெட்டி, முன்னாள் எம்.எல்.ஏ. சோமசேகர் ரெட்டி, முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலு, மாநகராட்சி உறுப்பினர் மோத்கர் ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட 11 பேர்மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related News

Latest News