அமெரிக்க மத்திய வங்கியான Federal Reserve இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக வட்டி விகிதத்தை குறைக்கும் முடிவை அறிவித்துள்ளது. இரண்டு நாள் நடைபெற்று முடிந்த ஃபெடரல் ஓபன் மார்க்கெட் கமிட்டி அதாவது FOMC கூட்டத்திற்குப் பிறகு, ஃபெட் தலைவர் ஜெரோம் பவல் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதன் மூலம் பெஞ்ச் மார்க் வட்டி விகிதம் 3.50%–3.75% அளவிலேயே இருக்கும் என உறுதி செய்யப்பட்டது.
அமெரிக்க பொருளாதாரம் மந்தநிலை நோக்கி செல்லும் அபாயம், வேலைவாய்ப்பு குறைவு, பணவீக்கம் இலக்கு எட்டப்படாமை ஆகிய காரணங்களால் வட்டி குறைப்பது அவசியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் மொத்தமாக 75 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக தனிநபர் கடன், கிரெடிட் கார்டு வட்டி உள்ளிட்ட குறுகியகால கடன்களின் வட்டி குறையும் நிலையில், வங்கி மற்றும் பத்திர முதலீடுகளின் வட்டி வருமானம் குறையும் என்று பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
சமீப நாட்களில் பணவீக்கம் குறைந்திருந்தாலும், ஃபெடரல் வங்கியின் 2% இலக்கு எட்டப்படாத நிலையில் வட்டி குறைப்பு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க அரசு சுமார் 43 நாட்கள் செயலிழந்திருந்ததால், முக்கிய பொருளாதார தரவுகள் வெளியாகவில்லை என்பதும் முடிவை பாதித்ததாகக் கூறப்படுகிறது.
கூட்டத்தில் 12 உறுப்பினர்களில் 9 பேர் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்க ஆதரித்ததும், 3 பேர் 50 அடிப்படை புள்ளிகள் குறைக்க வேண்டுமென வலியுறுத்தியதும் தகவலாக வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு 2026-லும் வட்டி குறைப்பு தொடருமா என்பது பொருளாதார தரவுகளைக் கொண்டு பின்னர் தீர்மானிக்கப்படும் என பவல் கூறியுள்ளார்.
Federal Reserve வட்டி குறைப்பு உலக தங்கம், வெள்ளி சந்தைகளில் ஏற்கனவே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக எதிர்பார்ப்புகளின் அடிப்படையில் விலைகள் உயர்ந்த நிலையில், தற்போது அறிவிப்பு வெளியானதால் மேலும் உயரக்கூடும். பொதுவாக வட்டி குறைப்பு காலங்களில் தங்கம் 3% வரை உயர்வு பெறுவது வழக்கம்.
இதற்கிடையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 25 பாயிண்ட் குறைப்பு போதாது எனவும் 50 பாயிண்ட் குறைத்திருந்தால் அமெரிக்கா உலகின் குறைந்த வட்டியுடைய நாடாக மாறியிருக்கும் எனவும் கருத்து தெரிவித்துள்ளார். அடுத்த கூட்டத்தில் வட்டி குறைப்பு இருக்கும் என உறுதி இல்லை என்றாலும், அடுத்த ஓராண்டு வட்டி உயர்வு வராது என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
