கிரிப்டோவை நம்பி கெட்ட டிரம்ப்! ஒரே மாதத்தில் 8500 கோடி ரூபாய் காலி!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது இரண்டாவது ஆட்சிக்காலத்தில் கிரிப்டோகரன்சியை ஒரு பெரிய டிரெண்டாக மாற்றினார். அவரது குடும்பமும், அவரைப் பின்பற்றும் பலரும் கிரிப்டோவில் கோடிக்கணக்கில் முதலீடு செய்தனர். ஆனால், இப்போது, கிரிப்டோ சந்தையில் ஏற்பட்டிருக்கும் ஒரு பிரம்மாண்ட சரிவு, டிரம்ப் குடும்பத்தின் சொத்துக்களையும், அவரது ஆதரவாளர்களின் சேமிப்பையும் கரைத்து வருகிறது. இது, கிரிப்டோ உலகின் கொடூரமான மறுபக்கத்தைக் காட்டுகிறது.

ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் (Bloomberg Billionaires Index) படி, டிரம்ப் குடும்பத்தின் சொத்து மதிப்பு, கடந்த செப்டம்பர் மாதம் 7.7 பில்லியன் டாலராக இருந்தது. ஆனால், இப்போது அது 6.7 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. இந்த ஒரே மாதத்தில், சுமார் 1 பில்லியன் டாலர், அதாவது கிட்டத்தட்ட 8500 கோடி ரூபாய், ஆவியாகிப் போயிருக்கிறது! இந்த மாபெரும் சரிவுக்கு முக்கியக் காரணம், கிரிப்டோகரன்சி மற்றும் அது தொடர்பான நிறுவனங்களில் அவர்கள் செய்த முதலீடுகள்தான்.

டிரம்பின் பெயரில் உருவாக்கப்பட்ட ஒரு மீம்காயினின் மதிப்பு, கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து கால்வாசி சரிந்துள்ளது. டிரம்பின் இரண்டாவது மகன் எரிக் டிரம்ப் முதலீடு செய்திருந்த ஒரு பிட்காயின் மைனிங் நிறுவனத்தின் பங்கு மதிப்பு, அதன் உச்சத்திலிருந்து பாதியாகக் குறைந்துள்ளது. இந்த ஆண்டு பிட்காயினை வாங்கிக் குவிக்கத் தொடங்கிய டிரம்பின் சோஷியல் மீடியா நிறுவனத்தின் பங்குகளும், வரலாறு காணாத சரிவில் இருக்கின்றன.

இந்தச் சரிவு, கிரிப்டோ உலகில் ஏற்பட்ட ஒரு பெரிய வீழ்ச்சியின் ஒரு பகுதிதான். இந்த வீழ்ச்சியில், 1 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்கள் கரைந்து போயுள்ளன. டிரம்ப் குடும்பத்துக்குப் பல வழிகளில் வருமானம் இருப்பதால், இந்த நஷ்டத்தை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியும். ஆனால், டிரம்பை நம்பி, அவரது கிரிப்டோ திட்டங்களில் முதலீடு செய்த சாதாரண முதலீட்டாளர்களின் நிலைமைதான் பரிதாபம்.

ஆனால், எரிக் டிரம்ப் என்ன சொல்கிறார் தெரியுமா? “இது ஒரு சிறந்த வாங்கும் வாய்ப்பு (Great Buying Opportunity). இந்தச் சரிவைப் பார்த்து பயப்படாமல், முதலீடு செய்பவர்கள்தான் இறுதியில் வெற்றி பெறுவார்கள். கிரிப்டோவின் எதிர்காலத்தின் மீது நான் முன்பை விட அதிக நம்பிக்கையுடன் இருக்கிறேன்” என கூறியுள்ளார்.

சரி, டிரம்ப் குடும்பத்தின் கிரிப்டோ முதலீடுகள் எந்தெந்த வகையில் நஷ்டத்தைச் சந்தித்துள்ளன? டிரம்பின் சோஷியல் மீடியா நிறுவனமான Trump Media, பிட்காயின் மற்றும் மற்ற கிரிப்டோக்களில் செய்த முதலீட்டில், சுமார் 800 மில்லியன் டாலர் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. அவரது குடும்பத்தின் முதன்மை கிரிப்டோ திட்டமான World Liberty Financial-ன் டோக்கன் மதிப்பு சரிந்ததால், காகித அளவில் சுமார் 3 பில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எரிக் டிரம்ப் முதலீடு செய்த American Bitcoin நிறுவனத்தின் பங்குகள் சரிந்ததால், குடும்பத்துக்கு மேலும் 300 மில்லியன் டாலருக்கும் அதிகமான நஷ்டம்.

டிரம்ப் குடும்பம், தங்களது கிரிப்டோ முதலீடுகளில் இருந்து டோக்கன்களை விற்பதன் மூலமும், மற்ற வழிகளிலும் பணம் சம்பாதித்துக் கொள்கிறது. ஆனால், “டிரம்ப்பை நம்பினால் கோடீஸ்வரன் ஆகிவிடலாம்” என்று நினைத்து, அவரது மீம்காயின்கள், கிரிப்டோ நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்த சாதாரண முதலீட்டாளர்கள்தான் இப்போது செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.

Related News

Latest News