மத்திய பிரதேசத்தில் 6 குழந்தைகள் சந்தேகத்துக்குரிய வகையில் இறந்ததற்கு காரணமாகக் கூறப்படும் ‘கோல்ட்ரிஃப்’ என்ற இருமல் மருந்தை தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்ய மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் தடை விதித்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் 1 முதல் 7 வயது வரை உள்ள 6 குழந்தைகள் கடந்த 15 நாள்களுக்குள் அடுத்தடுத்து சந்தேகத்துக்குரிய வகையில் உயிரிழந்தன. திடீரென ஏற்பட்ட சிறுநீரக செயலிழப்பு அதற்கு காரணம் என்பது தெரியவந்தது. விசாரணையில், ‘கோல்ட்ரிஃப்’ மருந்து மற்றும் நெக்ஸ்ட்ரோ டிஎஸ் மருந்து ஆகிய இருவேறு இருமல் மருந்துகளை அந்தக் குழந்தைகள் உட்கொண்டது விசாரணையில் கண்டறியப்பட்டது.
இதனிடையே, மத்திய பிரதேச உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி தினேஷ் குமாா் மௌரியா, தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்ககத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளாா். அதில், காஞ்சிபுரத்தில் செயல்படும் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் ‘கோல்ட்ரிஃப்’ மருந்தை சோதனைக்கு உட்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தில் ஆய்வு மேற்கொள்ளுமாறும், இதுதொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, தமிழக மருந்து கட்டுப்பாட்டு துணை இயக்குநா் எஸ்.குருபாரதி தலைமையிலான குழுவினா், கடந்த இரு நாள்களாக சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளனா். மேலும், மறு உத்தரவு வரும் வரை தமிழகம் முழுவதும் அதன் விற்பனையையும், விநியோகத்தையும் நிறுத்தி வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மற்றொரு மருந்தான நெக்ஸ்ட்ரோ டிஎஸ் மருந்து தமிழகத்தில் ஏற்கெனவே விற்பனையில் இல்லை என எஸ்.குருபாரதி தெரிவித்துள்ளாா்.