நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கரூரில் பிரச்சாரம் செய்த போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் விபத்து நடந்த உடனே செந்தில் பாலாஜி மருத்துவமனைக்குச் சென்றது எப்படி? என கேள்வி எழுந்த நிலையில் அதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர்,” கூட்டம் நடத்தும்போது, எவ்வளவு மக்கள் கூடுவார்கள் என கணித்து அதற்கேற்ற இடத்தை தேர்வு செய்ய வேண்டியது ஒரு அரசியல் கட்சியின் பொறுப்பு. கரூர் லைட் அவுஸ் கார்னரில் அதிகபட்சம் 7000 பேர் நிற்கலாம், உழவர் சந்தை அருகே அதிகபட்சம் 5000 பேர் கூடலாம். கூட்டநெரிசல் அதிகமாகும்போது, ஜெனரேட்டர் அறை தடுப்புகளை உடத்து உள்ளே விழத்தொடங்கினர், அப்போதுதான் ஜெனரேட்டர்கள் ஆஃப் செய்யப்பட்டது. அப்போது கூட சாலை விளக்குகள் ஆஃப் செய்யப்படவில்லை. அவர்கள் கூடுதலாக அமைத்த விளக்குகள் மட்டும் ஆஃப் செய்யப்பட்டது.
விபத்து நடந்த உடனேயே எப்படி மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜி சென்றார் என கேள்வி எழுப்புகிறார்கள். உண்மையில் சம்பவம் நடந்த அன்று எனது வீட்டில் திமுக கிளை மற்றும் ஒன்றிய நிர்வாகிகளை சந்தித்து விட்டு, பின்னர் கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் பேசிக் கொண்டிருந்தேன். இதே அலுவலகத்தில் தான் அமர்ந்திருந்தேன். இங்கிருந்து அமராவதி மருத்துவமனை எவ்வளவு தூரம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். விபத்து நடந்து விட்டது என தகவல் கிடைத்த உடனேயே அதாவது 7.47 மணிக்கு நான் அமராவதி மருத்துவமனைக்கு சென்று விட்டேன் என விளக்கம் அளித்துள்ளார்.