Wednesday, February 18, 2026

நடிகர் ரோபோ சங்கர் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்

பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் நேற்று இரவு உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 46.

உடல்நலக்குறைவு காரணங்க தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ரோபோ சங்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரோபோ சங்கரின் மறைவு தமிழ் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

ரோபோ சங்கர் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.திரைக்கலைஞர் ரோபோ சங்கர் மறைவெய்திய செய்தியறிந்து வருத்தமுற்றேன். மேடைகளில் துவங்கி, சின்னத்திரை – வண்ணத்திரை என விரிந்து, தமிழ்நாட்டு மக்களை மகிழ்வித்தவர் ரோபோ சங்கர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கலையுலகினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

சிறு, சிறு விழா மேடைகளில் தொடங்கி, தொலைக்காட்சி, வெள்ளித்திரை என தனது தனித்துவ நடிப்புத் திறமையால் படிப்படியாக முன்னேறி வந்து, தனது இயல்பான நகைச்சுவை உணர்வால் ரசிகர்களை ஈர்த்த அன்பு சகோதரர் ரோபோ சங்கரின் இழப்பு என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

பலகுரல் மன்னன் ரோபோ சங்கர் தனக்குள்ள தனி திறமையாலும், கடின உழைப்பாலும் முன்னுக்கு வந்தவர் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார். அன்பாகவும், பண்பாகவும் பழகக்கூடியவர் என்பதோடு மட்டுமல்லாமல், அனைவருக்கும் உதவக்கூடிய மனோபாவம் படைத்தவர் ரோபோ சங்கர். இவருடைய இழப்பு திரைப்படத் துறையினருக்கு பேரிழப்பு என வேதனையுடன் கூறியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை

தமிழ் திரையுலகில் தனித்துவமான நடிப்பாலும், மக்களின் இதயங்களில் புன்னகையை விதைத்ததாலும், ஒரு தலைமுறைக்கே அடையாளமாக விளங்கிய நடிகர் ரோபோ சங்கர் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். ஒரு கலைஞன் தனது கலை மூலம் மக்களிடையே நிலைத்து நிற்பதற்கே மிகப்பெரிய அர்த்தம் உண்டு. அந்த அர்த்தத்தை உண்மையாக்கியவர் தான் ரோபோ சங்கர் என புகழாரம் சூட்டியுள்ளார்.

தொல்.திருமாவளவன்

“நண்பர் ரோபோ சங்கரின் மறைவு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது என்றும் தன்மீதும், இயக்கத்தின் மீதும் பேரன்பு கொண்டிருந்தவர் ரோபோ சங்க எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். கலை உலகில் சாதனைகள் படைத்து பொதுமக்களின் நல்லன்பை வென்றெடுத்த ரோபோ சங்கரின் மறைவு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பு என குறிப்பிட்டுள்ளார்.

தமிழிசை சவுந்தரராஜன்

சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை பிரபலமாக விளங்கிய திரைப்படக் கலைஞர் ரோபோ சங்கரின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். திரைப்படக் கலைஞர்கள் தங்கள் கடுமையான பணிகளுக்கிடையில் உடல் நலத்தையும் பேணி பாதுகாக்க வேண்டும் என என கூறியுள்ளார்.

அண்ணாமலை

தனது நகைச்சுவை திறனால், தமிழக மக்கள் அனைவரின் உள்ளங்களிலும் இடம்பிடித்த திரைக்கலைஞர் ரோபோ சங்கர் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவரது இறப்பு செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது. ரோபோ சங்கர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன் என இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

டிடிவி தினகரன்

தமிழ் திரையுலகில் தனித்துவமிக்க நடிகராக திகழ்ந்த ரோபோ சங்கரை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக திரைக்கலைஞர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்து கொள்வதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்

நடிகர் கமல்

கமல்ஹாசனின் தீவிர ரசிகரான ரோபோ சங்கர் உயிரிழந்த நிலையில், உன் வேலை நீ போனாய், என் வேலை தங்கிவிட்டேன் என கமல்ஹாசன் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள X தள பதிவில், ரோபோ புனைப்பெயர் தான். என் அகராதியில் நீ மனிதன். ஆதலால் என் தம்பி போதலால் மட்டும் எனை விட்டு நீங்கி விடுவாயா நீ? உன் வேலை நீ போனாய் என் வேலை தங்கிவிட்டேன். நாளையை எமக்கென நீ விட்டுச் சென்றதால் நாளை நமதே என்று குறிப்பிட்டுள்ளார்.

அன்புமணி ராமதாஸ்

அனைத்துத் தரப்பினராலும் ரசிக்கப்பட்ட ரோபோ சங்கர் காலமானார் என்ற செய்தியறிந்து வேதனை அடைந்தேன் என அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மன அழுத்தத்தாலும், சோதனைகளாலும் இறுக்கமாக இருந்த காலங்களில், அவரது நகைச்சுவைகளின் மூலம் கவலைகளை மறந்து சிரிக்க வைத்தவர் ரோபோ சங்கர் என தெரிவித்துள்ளார்.

பிரேமலதா

ரோபோ சங்கரின் மறைவு சின்னத்திரை மற்றும் திரையுலகிற்கு பேரிழப்பு என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக திரையுலகினருக்கு ஆறுதலை தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.

Related News

Latest News