மீதமுள்ள பிணைக் கைதிகளைவிடுவித்து, இஸ்ரேலின் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால், காசா பகுதியில் போர் நிறுத்தத்துக்கான பேச்சுவார்த்தை தொடக்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
தற்போது வரை 75 சதவீத காசா பகுதிகள் இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பட்டில் இருக்கின்றன. கடந்த சில நாட்களுக்கு முன் காசாவை முழுமையாக கைப்பற்றும் திட்டத்துக்கு இஸ்ரேல் ராணுவ அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் (Katz) ஒப்புதல் தெரிவித்திருப்பது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக 2023ம் ஆண்டு ஹமாஸ் பயங்கரவாதிகள், இஸ்ரேலிய நகரங்களை தாக்கி சுமார் 1,200 பேரை கொன்றனர். மட்டுமல்லாமல் 251 பேரை பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர். இதைத் தொடர்ந்து, காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது.
இந்த நிலையில், ஹமாஸ் பயங்கரவாதிகளை முற்றிலுமாக ஒழிக்கவும், அவர்கள் பிடியில் உள்ள பிணைக்கைதிகளை மீட்கவும் இஸ்ரேல் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல கட்டங்களாகப் பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்ட போதும், இன்னும் 50 பேர் வரை ஹமாஸ் பிடியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த சூழலில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மீதமுள்ள பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் ஒப்புதல் தெரிவித்து, இஸ்ரேலின் நிபந்தனையை ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில், காசா பகுதியில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை தொடக்கப்படும் என்று கூறியுள்ளார்.