மெத்தையில் படுத்துக் கொண்டே நெட்ஃபிளிக்ஸில் படம் பார்க்கும் பணிக்கு 25 லட்ச ரூபாய் ஊதியமாக வழங்கப்படும் என்று பிரபல படுக்கை தயாரிப்பு நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.
இணையத்தையும் மனிதர்களையும் பிரிக்க முடியாது என்ற சூழல் தற்போது நிலவி வருகிறது. பெரும்பாலானோரின் ஓய்வு நேரங்கள், சமூக வலைத்தளங்களிலும் ஓடிடி தளங்களிலும் கழிகிறது.
மேலும்,தூங்குவதற்கு முன்னர் ஓடிடி தளத்தில் படம் பார்த்துவிட்டு தூங்கும் பழக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கிராஃப்டட் பெட்ஸ் (crafted beds) நிறுவனம், தாங்கள் தயாரிக்கும் மெத்தைகளை பரிசோதித்து விமர்சனம் எழுத ஆட்களை தேடுகிறது.
இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் ஒவ்வொரு வாரமும் அந்த நிறுவனம் தயாரித்த உயர்தர மெத்தையில் படுத்து கொண்டே நெட்பிளிக்ஸ் தளத்தில் வீடியோக்களை பார்த்து அந்த மெத்தை குறித்து விமர்சனம் எழுதி தர வேண்டும். அத்துடன் சிறு சிறு வேலைகளும் கொடுக்கப்படும்.
இதற்காக தேர்வு செய்யப்படுபவர்களின் வீட்டிற்கு வாரந்தோறும் மெத்தை அனுப்பி வைக்கப்படும். அவர்கள் வாரத்திற்கு 37.5 மணி நேரம் பணியாற்ற வேண்டும். இந்த பணிக்காக ஓர் ஆண்டிற்கு 24 ஆயிரம் யூரோ ஊதியமாக வழங்கப்படும். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 25 லட்சம் ஊதியமாக வழங்கப்படும் .
தங்கள் வாடிக்கையாளர்களின் மனநிறைவுதான் முக்கியம் என கருதும் இந்த நிறுவனம் விமர்சனம் எழுதுவதில் சிறப்பான நபர்களை தேர்வு செய்ய முன் வந்துள்ளது. சிறந்த முறையில் விமர்சனம் எழுதும் திறமை உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
ஆனால் விண்ணப்பிக்கும் நபர் இங்கிலாந்து நாட்டின் குடிமகனாக இருக்க வேண்டும். மற்ற நாட்டினர் விண்ணப்பிக்க முடியாது.
மெத்தையில் படுத்துக்கொண்டே நெட்பிளிக்ஸ் தளத்தில் படம் பார்க்கும் வேலைக்கு 25 லட்சம் ரூபாய் சம்பளம் என அறிவித்துள்ளது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.