இன்றைய சூழலில் மன அழுத்தம் என்பது உலகளாவிய பிரச்னையாக மாறி வருகிறது. ஆண்டுதோறும் மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இயந்திரமயமான வாழ்க்கை முறை, வேலை வாய்ப்பின்மை, காதல் தோல்வி, பொருளாதார நெருக்கடி போன்றவை தற்கொலைக்கு காரணங்களாக அமைகின்றன.
பிரச்னைகள் துரத்தும்போது அதனால் ஏற்படும் மன அழுத்தத்தை யாரிடமும் பகிராமல் மனதிற்குள் புதைத்து வைக்கும்போது அது தற்கொலை எண்ணத்தை தூண்டி விடுகிறது. இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டில் மனம் விட்டு அழுவதற்காகவே ஓர் அறை அமைக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மாட்ரிட்டில் இந்த அறை உருவாக்கப்பட்டுள்ளது. மன அழுத்தத்தில் உள்ளவர்கள் இந்த அறைக்குள் சென்று அழுது விட்டு வரலாம்.
அழுகை அறைக்கு வரவேற்கிறோம் என்ற வாசகத்துடன் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களை இந்த அறை வரவேற்கிறது. தற்கொலைகளை தடுக்கும் முயற்சியாக இந்த அறை உருவாக்கப்பட்டுள்ளது.
மனதில் கவலை உள்ளவர்கள் இந்த அறைக்கு சென்று மனம் விட்டு அழலாம். மேலும், மன நல ஆலோசகர்களின் தொடர்பு எண்களும் தொலைபேசியும் அந்த அறையில் இருக்கும். மன அழுத்தத்தில் இருப்பவர்கள் மன நல ஆலோசகர்களை தொடர்புகொண்டு ஆலோசனை பெறலாம்.
ஸ்பெயினில் உள்ள ஒட்டுமொத்த மகக்ள் தொகையில் 5.8 சதவீதம் பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவ்து பத்தில் ஒருவர் மன அழுத்தத்துடன் வாழ்கின்றனர். இந்த நிலையில் அழுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் அறை மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.