கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே 14 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்து, தோளில் தூக்கிச் செல்லப்படும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகியுள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள அஞ்செட்டி மலைகிராமத்தைச் சேர்ந்த 7ஆம் வகுப்பு வரை படித்த 14 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி 30 வயதான மாதேஸ் என்பவருக்கு கடந்த 3ஆம் தேதி பெங்களூருவில் பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். பின்னர், மலைகிராமத்தில் உள்ள கணவர் வீட்டிற்கு சிறுமியை அழைத்து வந்துள்ளனர். ஆனால், திருமணத்தில் விருப்பம் இல்லாததால் அச்சிறுமி வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்.
இந்நிலையில், கணவர் வீட்டில் விடுவதற்காக, உறவினர்கள் சிறுமியை வலுக்கட்டாயமாக தோளில் தூக்கிச் சென்றுள்ளனர். அப்போது, திருமணம் பிடிக்கவில்லை, என்னை விட்டுவிடுங்கள் என்றுச் சொல்லி சிறுமி கதறி அழுத காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த புகாரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமியின் தாயார் நாகம்மா, மாதேஷ், மல்லேஷ் ஆகிய மூவரை கைது செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.