வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கொண்டைக் கடலை மீது 10 சதவீதம் இறக்குமதி வரி வசூலிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
கடந்த ஆண்டு மே மாதத்தில் வெளிநாடுகளில் இருந்து வரி ஏதும் இல்லாமல் கொண்டைக் கடலை இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்தது. உள்நாட்டில் கொண்டைக் கடலைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுவிடக் கூடாது என்ற நோக்கிலும், விலை உயா்வைக் கட்டுப்படுத்தும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அப்போது 2025 மாா்ச் 31-ஆம் தேதி வரை இந்த வரி விலக்கு அளிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இறக்குமதி செய்யப்படும் கொண்டைக் கடலைக்கு 10 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது. 2024-25 நிதியாண்டில் நாட்டில் 1.15 கோடி டன் கொண்டைக் கடலை உற்பத்தி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.