சிலர் திருமணம் செய்வதற்காக வித்தியாச வித்தியாசமான இடங்களை எல்லாம் தேர்வு செய்வார்கள். சிலர் கடற்கரை ஒரம் தேர்வு செய்வார்கள். சிலர் மலை உச்சியில் தேர்வு செய்வார்கள். ஏன் விமானங்களில் பறந்து கொண்ட திருமணத்தை நடத்திய தம்பதிகளும் உண்டு ஆனால் இப்படியெல்லாம் திருமணம் செய்ய அதிகம் செலவாகும். ஆனால் ஒரு இடத்தில் திருமணம் செய்தால் செலவுக்கு பதிலாக வருமானம் கிடைக்கும் என்றால் நம்ப முடிகிறதா?
மத்திய இத்தாலி பகுதியில் உள்ள இடம் Lazio இந்த இடத்தில் கொரோனாவிற்கு முன்பு அதிகம் திருமணங்கள் நடந்துள்ளது. உலகத்தின் பாரம்பரியமான இடம் என்பதால் இந்த இடத்தில் காதல் தம்பதிகள் திருமணம் செய்து கொள்வார்கள். ஆனால் தற்போது கொரோனா அச்சம் காரணமாக இந்த இடத்தில் நடக்கும் திருமணங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் இந்த திருமணத்தைச் சார்ந்து நடந்து வந்த வர்த்தகங்கள் பாதிக்கப்பட்டது.இதையடுத்து அந்நாட்டு அரசு அப்பகுதியில் மீண்டும் திருமணத்தை ஊக்குவிக்கும் வகையில் அப்பகுதியில் திருமணம் நடத்ததும் தம்பதிகளுக்கு யூரோ € 2,000 அதாவது இந்திய மதிப்பில் 1.68 லட்சம் பணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இந்த பணத்தை பெற ஒரே தகுதி இந்த திருமணத்திற்கு தம்பதிகள் செய்யும் செலவுகளை எல்லாம் இப்பகுதியில் உள்ள வர்த்தகர்களிடம் செய்ய வேண்டுமாம் . அதாவது திருமணத்திற்கான சாப்பாடு, புகைப்படம் உள்ளிட்ட சகல விஷயங்களை ஒரு தொழில் வாய்ப்பாக இப்பகுதியில் உள்ள மக்களுக்கு வழங்கினால் அரசு அந்த தம்பதிக்கு ரூ1.68 லட்சம் வழங்கும் என அறிவித்துள்ளது. இதை அந்நாட்டு மக்கள் மட்டுமல்ல உலகில் யார் வேண்டுமானாலும் அங்கு வந்து திருமணம் நடத்தி இந்த பணத்தை பெறலாமாம். இதற்காக அந்நாட்டு அரசு 10 மில்லியன் யூரோக்களை ஒதுக்கியுள்ளது. இந்த சலுகை 2022 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை நடக்கும் திருமணங்களுக்கு மட்டுமே பொருந்துமாம் .